கடந்த ஆண்டு ஜுலை மாதம் பெர்சே 2.0 பேரணி நிகழ்ந்த போது பொதுப் பயனீட்டு வசதிகள் நிறைந்த இடத்திற்கு அருகில் கண்ணீர் புகைக் குண்டுகளை வெடித்ததின் மூலம் போலீசார் மனித உரிமைகளை மீறியுள்ளதாக சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் கூறுகிறது.
“போலீசார் சில சமயங்களில் குறிப்பாக துங்ஷின் மருத்துவமனை, சீன மகப்பேறு மருத்துவமனை, கேஎல் சென்ட்ரல் ஆகியவற்றுக்கு அருகில் கண்ணீர் புகைக் குண்டுகளை வெடித்ததின் மூலம் பொது மக்களுடைய பாதுகாப்புக்கு அபாயத்தை ஏற்படுத்தியுள்ளனர். அவை மனித உரிமைகள் மீறப்பட்ட சம்பவங்கள்,” என அது தெரிவித்தது.
“துங்ஷின் மருத்துவமனை மீது நேரடியாக கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்படவில்லை என்றாலும் ஜாலான் புடு நெடுகிலும் கண்ணீர் புகைக் குண்டுகள் வெடிக்கப்பட்டது, அந்த மருத்துவமனையில் உள்ள மக்களுக்கும் மருத்துவமனைக்கு அருகில் இருந்த மக்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்தியது.”
சுஹாக்காமின் அறிக்கையை அதன் உதவித் தலைவர் காவ் லேக் தீ இன்று சுஹாக்காம் தலைமையகத்தில் நிருபர்களுக்கு வாசித்தார்.
கடந்த ஆண்டு ஜுலை மாதம் 9ம் தேதி நிகழ்ந்த பெர்சே 2.0 பேரணிக்கு முன்னும் பின்னரும் மனித உரிமைகள் மீறப்பட்டதாக கூறப்படுவது மீது பொது விசாரணை நடத்திய பின்னர் தயாரிக்கப்பட்ட சுஹாக்காமின் 40 பக்க அறிக்கையை காவ் வாசித்தார்.