மூன்றாவது முறை அதிபரானார் விளாடிமிர் புடின்

ரஷ்ய அதிபராக விளாடிமிர் புடின் (வயது 59) நேற்று மீண்டும் பொறுப்பேற்றார். ரஷ்ய அதிபராக இருந்த போரிஸ் எல்சினுக்கு பிறகு கடந்த, 2000-ம் ஆண்டில் அதிபரானார் விளாடிமிர் புடின். 2008ம் ஆண்டு வரை அதிபராக இருந்தார்.

ரஷ்ய சட்டப்படி இரண்டு முறைக்கு மேல் அதிபர் பதவியை வகிக்க முடியாது என்பதால் தன்னுடைய ஆதரவாளர் திமித்ரி மெத்வடேவை, 2008-ல் அதிபராக்கினார். ரஷ்ய அதிபர் பதவியை இரண்டு முறைக்கு மேல் வகிக்கும் வகையில் சட்டம் கொண்டு வந்தார். இதையடுத்து கடந்த மார்ச் மாதம் நடந்த அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இதையடுத்து நேற்று, மாஸ்கோவின் கிரம்ளின் மாளிகையில் நடந்த, பதவி ஏற்பு விழாவில் மூன்றாவது முறையாக அதிபர் பொறுப்பை ஏற்றார். அதிபர் தேர்தலில் நிறைய தில்லு முல்லு நடந்ததாக கூறி மார்ச் மாதம் தேர்தல் முடிவின் போது போராட்டம் நடந்தது. இது தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் புடின் மீண்டும் அதிபராவதை எதிர்த்து ஊழல் எதிர்ப்பு தலைவர் அலெக்சி நாவல்னி, விடுதலை கட்சி தலைவர் போரிஸ் நெம்ட்சோவ், இடதுசாரி தலைவர் செர்ஜி உடால்ட்சோவ் உள்ளிட்டோர், கிரம்ளின் மாளிகைக்கு அருகே நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர். போலீசார் இவர்களை தடியடி நடத்தி கலைந்து போக செய்தனர். இந்த போராட்டம் தொடர்பாக, 400 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.