பிபிசி தொலைக்காட்சியில் செய்தி வாசித்த பிரிட்டிஷ் இளவரசர்!

பிரிட்டிஷ் ராணி எலிசபெத் முடிசூடி 60 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. அந்நிகழ்வை கொண்டாடும் வகையில் அங்கு பல்வேறு விழாக்கள் அமர்க்களமாக நடைபெற்று வருகின்றன.

இதையொட்டி ஸ்காட்லாந்தில் நடந்த அரசு விழாவில் பிரிட்டிஷ் பட்டத்து இளவரசர் சார்லஸ் (வயது 63) அவரது மனைவி கமீலா ஆகியோர் நேற்று கலந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக புகழ் பெற்ற பி.பி.சி.-இல் பிரிட்டிஷ் இளவரசர் சார்ல்ஸ் சிறிது நேரம் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்தார்.

அப்போது ஸ்காட்லாந்தின் வானிலை அறிக்கை செய்தியை வாசித்தார். இன்று மாலை கடும் குளிர் காற்று வீசக் கூடும். மேற்கு பகுதியில் லேசான மழை பெய்யும். அப்பகுதியில் நிலவிய தட்ப வெப்ப நிலை பற்றிய தகவல்களை தனது பாணியில் வாசித்து அனைவரையும் வியக்க வைத்தார். அவரை தொடர்ந்து மனைவி கமீலாவும் வானிலை குறித்த செய்தி வாசித்தார்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த இளவரசர் சார்ல்ஸ் இந்த பணியை தனக்கு வழங்கிய கடவுளுக்கு நன்றி கூறினார்.

இளவரசர் சார்லஸ் மற்றும் கமீலா ஆகியோர் செய்தி வாசித்தது குறித்து வானிலை அறிக்கை வாசிப்பாளர் ஸ்டாவ் மனோஸ் கூறும் போது, “இவர்கள் எப்படி செய்தி வாசிப்பார்களோ என்ற அச்ச உணர்வு இருந்தது. ஆனால், இருவரும் தங்களது பணியை மிக சிறப்பாக செய்து முடித்தனர்” என பெருமிதத்துடன் கூறினார்.