ரஷியாவில் அதிபர் புதினுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்

ரஷியாவின் புதிய அதிபராக விளாடிமிர் புதின் 3-வது முறையாக பதவி ஏற்றுள்ளார். தேர்தலில் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக அவரை எதிர்த்து எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இந்த நிலையில் நேற்று தலைநகர் மாஸ்கோவில் புதினுக்கு எதிரான போராட்டத்தில் பொதுமக்கள் குதித்தனர்.

மக்களின் உரிமைகளில் அரசு தலையிடக்கூடாது என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதற்கு ரஷிய எழுத்தாளர்கள், கவிஞர்கள் ஏற்பாடு செய்து இருந்தனர். இப்போராட்டத்தில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தானாக முன்வந்து கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கோஷங்களையோ, கையில் கோரிக்கை அட்டைகளை ஏந்தி வரவில்லை. மாறாக, மாஸ்கோ நகரின் வீதிகளில் கும்பலாக நடந்தபடியே சென்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.