ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகளை நல்வழிப்படுத்தி அவர்களை அரசுடன் ஒத்துழைக்க செய்ய சமாதான கவுன்சில் அமைக்கப்பட்டுள்ளது. அதன் தூதுவராக இருந்த அர்சலா ரஹ்மானி நேற்று தலைநகர் காபூலில் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
முன்பு தலிபான் தீவிரவாதியாக இருந்த இவர் பின்னர் மனம் திருந்தி ஆப்கான் அரசின் சமாதான முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்து வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
வெள்ளை நிற காரில் தனது அலுவலகத்துக்கு தானே காரை ஓட்டிச் சென்றார். உடன் பாதுகாவலர் யாரும் செல்லவில்லை. அப்போது ரோட்டோரம் மறைந்திருந்த மர்ம நபர் சத்தமின்றி சுடும் சைலன்ஸ் துப்பாக்கியால் சுட்டான். அதில் படுகாயம் அடைந்த அவர் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். இந்த கொலையை செய்தது தலிபான் தீவிரவாதிகளாக இருக்கலாம் என போலீசார் சந்தேகப்பட்டனர்.
ஆனால், அவரை தங்கள் இயக்கத்தினர் கொல்லவில்லை என தலிபான் செய்தி தொடர்பாளர் ஷபியுல்லா முஜாகீத் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் உள்ள 70 பிரபலங்களில் ஒருவராக ரஹ்மானி திகழ்ந்தார். எனவே, அவரை தலிபான்களுடன் பேச்சு நடத்தும் சமாதான தூதுவராக அதிபர் ஹமீத் கர்சாய் நியமித்து இருந்தார்.