அம்பிகா வீட்டுக்குமுன் மாட்டு பேர்கர்; இந்து சேவை சங்கம் கண்டனம்!

பெர்சே 2.0 இணைத் தலைவரான அம்பிகா ஸ்ரீனிவாசனின் வீட்டுமுன் மாட்டிறைச்சி கொண்ட பேர்கர்களை வேண்டுமென்று சமைத்து விநியோகம் செய்ததோடு அம்பிகாவிற்கும் கொடுக்க முற்பட்ட செயல் சமய துவேசமானது என்று சமய அமைப்பொன்று கண்டனம் தெரிவித்துள்ளது.

கடந்த மே 10-ஆம் தேதி இக்லாஸ் என்ற சில்லரை வணிகர்கள் அமைப்பின் தலைவர் முகமட் ரிட்சுவான் அப்துல்லாவின் தலைமையில் சுமார் பத்துபேர் அடங்கிய குழுவொன்று சுமார் 2 மணியளவில் அம்பிகாவின் வீட்டின் முன் சுமார் 200 மாட்டிறைச்சி கொண்ட பேர்கர்களை சமைத்து விநியோகித்தனர்.

இச்செயலை வன்மையாக கண்டிப்பதாக இந்து சேவை சங்கத்தை சார்ந்த வி.கே. ரகு தனது பத்திரிக்கை செய்தியில் கூறினார்.

ஒருவர் இந்து என்று தெரிந்தும் இது போன்ற ஒரு நடவடிக்கையை செய்வதும் ஒரு தனிப்பட்ட மனிதரின் சுதந்திரத்திற்கும் பாதுகாப்புக்கும் மிரட்டலாக கூடுவதும் எவ்வகையில் ஏற்றுக்கொள்வது” என வினவும் ரகு “இதே போன்ற செயலை பிரதமர் இல்லத்தின் முன் செய்ய இயலுமா? அங்கு நாம் சென்று பன்றி சூப் விற்க முடியுமா?” என கேட்கிறார்.

இது போன்ற நிகழ்வுகளை ஆதரிக்கும் வகையில் கருத்துரைத்த போலீஸ் படைத்தலைவர் காலிட் அபு மாக்காரின் செய்கை பொறுப்பற்றது என்று சாடிய ரகு, குற்றவியல் சட்டப்பிரிவு 298-இன் கீழ் பிறரின் சமய உணர்வுகளை நோகடிக்கச் செய்யும் எந்த செய்கையும் சட்டப்படி குற்றமாகும். இப்போது போலீசே குற்றங்களை புரிய ஆதரவளிக்கிறார்களா? என்று வினவுகிறார்.

“இந்துக்களை அவமதிக்கும் போது நாம் சும்மா இருந்தததால்தான், நமது கோவில்கள் உடைக்கப்பட்டன, மாட்டுத்தலை ஊர்வலம் வைத்து நம்மை இழிவு படுத்தினர், இதனால்தான் மஇகா-வுக்கும் பாரிசானுக்கும் பலத்த அடி போன தேர்தலிலே விழுந்தது. இவர்கள் திருந்தமாட்டார்கள், நாம் தான் ஆட்சியை மாத்துனும்” என்கிறார் கிள்ளான் சமூகப்போரட்டவாதி எல். சேகரன்.