“நான் இறந்து விட்டால் என் உடல் மீது புலிக்கொடியைப் போர்த்துங்கள்”

இறந்தபின் தனது உடல்மீது புலிக்கொடிப் போர்த்த வேண்டுமென தமிழ்நாடு திரைப்பட இயக்குனரும் மூத்த நடிகருமான மணிவண்ணன் கோரியுள்ளார்.

பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனையை இரத்து செய்ய முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியதற்காக நன்றி தெரிவிக்கும் கூட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கடந்த சனிக்கிழமை மாலை சென்னை எம்ஜிஆர் நகரில் நடந்தது.

அதன் போது உரையாற்றிய இயக்குனர் மணிவண்ணன்,

“மூன்றுபேரின் தூக்கு தண்டனை நிறைவேற்றுப்படுவதாக அறிவிக்கப்பட்டதிலிருந்து நாங்கள் எல்லாம் துடித்துக் கொண்டிருந்தோம். ஒவ்வொரு நிமிடமும் உயிர் போகும் வலி. அந்த நேரம் பார்த்து, தூக்கு தண்டனையை நிறுத்தும் அதிகாரம் எனக்கில்லை என முதல்வரும் சொல்லிவிட்டார்.”

“ஒரு பக்கம் சட்டப் போராட்டம் ஆரம்பித்து, நீதிமன்ற வளாகத்தில் அத்தனை பேரும் தீர்ப்புக்காக காத்துக் கொண்டிருந்தோம். நீதிபதி 8 வாரங்கள் தூக்கு தண்டனையை நிறுத்துமாறு உத்தரவிட்ட அடுத்த கணம், சட்டமன்றத்தில் தண்டனையை ரத்து செய்யும் தீர்மானத்தை முதல்வர் அவர்கள் அனைத்துக் கட்சியினரின் ஆதரவுடன் நிறைவேற்றினார். போன உயிரை திரும்ப அவர் தந்தது போல உணர்ந்தோம்… இப்போது சொல்லுங்கள். இந்த அம்மாவுக்கு நன்றி சொல்லாமல் வேறு யாருக்கு நன்றி சொல்வது?”

“நண்பர்களே, நான் மிஞ்சிப் போனால் இன்னும் சில ஆண்டுகள் உயிரோடு இருப்பேன். எனக்கு அரசியல், பதவி என எந்த ஆசையும் இல்லை. இந்தப் பிள்ளைகள் மூவரும் உயிரோடு திரும்ப வேண்டும். நான் இறந்தால், என் உடலை நாம் தமிழர் கட்சியிடம் ஒப்படைத்துவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன். என் உடம்பில் புலிக்கொடியைப் போர்த்தி எடுத்துச் செல்லுங்கள், அது போதும்.” என்றார்.

மணிவண்ணனின் இந்தப் பேச்சைக் கேட்டு மேடையில் இருந்த அத்தனை பேரும் எழுந்து நின்று உணர்ச்சி மிகுதியால் கண்கலங்கி நின்றனர்.