படகில் ஆஸ்திரேலியா செல்ல முயன்ற தமிழர்கள் கைது

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்ட ஒரு பெண் மற்றும் இரண்டு சிறார்கள் அடங்கலாக 44 தமிழர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கையின் கிழக்கே, கல்முனைக் கடற்பரப்பில் ரோந்தில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினரால் இழுவைப் படகொன்றிலிருந்து கைது செய்யப்பட்டுள்ள இவர்கள் திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

நீர்கொழும்பிலிருந்து புறப்பட்டதாகக் கூறப்படும் இந்தப் படகில் பயணித்தவர்கள் வடக்கு கிழக்குப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என இலங்கை கடற்படைப் பேச்சாளர் கூறினார்.

கைப்பற்றப்பட்ட இழுவைப் படகில் பெருமளவு குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் இருந்ததாகக் கூறப்படுகின்றது.

இவர்கள் 24 மணி நேரம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டதன் பின்னரே நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்படுவார்கள் என்று இலங்கைப் காவல்துறை பேச்சாளர் பிரிஷாந்த ஜயக்கொடி கூறினார்.

கடல் வழியாக நாட்டை விட்டு வெளிறே முயன்ற இந்த 44 பேருக்கு எதிராகவும் குடிவரவு குடியகல்வு சட்ட விதிகளுக்கு ஏற்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை பேச்சாளர் மேலும் கூறினார்.

TAGS: