“உயர்ந்த பதவிகளை வகிக்கின்றவர்கள் கவனமாகச் சிந்தித்த பின்னர் பேசியிருந்தால் பேர்கர் கடைகளும் பின்புறத்தைக் காட்டும் உடற்பயிற்சிகளும் நிகழ்ந்திருக்காது.”
துணை ஐஜிபி வீட்டுக்கு முன்னாள் தோசைக் கடை இல்லை
ஜனநாயகவாதி 53: அங்காடிக்காரர்கள் அமைப்பான இக்லாஸ் தலைவர் முகமட் ரிட்சுவான் அப்துல்லா மற்றும் அவருக்குப் பின்னணியில் இயங்கும் ஆதரவாளர்களான துணை ஐஜிபி (துணைத் தேசியப் போலீஸ் படைத் தலைவர்) காலித் அபு பாக்கார் போன்ற கோமாளிகள் உள்ளத்தில் நல்ல உணர்வுகள் உருவாகியிருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
தோசைக் கடைகள் போடப்படும் என அறிவிக்கப்பட்டதும் மற்றவர்களும் செய்யக் கூடிய விஷயங்கள் பற்றி அவர்களைச் சிந்திக்க வைத்திருக்க வேண்டும்.
உண்மையில் அந்த முழு நாடகமும் அம்னோவின் போராட்டத்தை குலைத்து விட்டது. அதனால் யாருக்கு வாக்களிக்கக் கூடாது என்பதை மதில் மேல் பூனையாக இருந்தவர்கள் இப்போது உணர்ந்து விட்டார்கள்.
அப்டூயூ: அந்த நாடகங்களை நிறுத்திக் கொண்டதுதான் சரியான நடவடிக்கை ஆகும். மற்றவர்கள் முட்டாள்தனமாக நடந்து கொண்டால் நல்ல சிந்தனை கொண்டவர்கள் அந்த மடத்தனத்தை பின்பற்றும் அளவுக்குத் தாழ்ந்து போகக் கூடாது. நல்ல வேளையாக அந்த அம்சம் கவனத்தில் கொள்ளப்பட்டு விட்டது.
முஷிரோ: பெர்சே கூட்டுத் தலைவர் எஸ் அம்பிகா வீட்டுக்கு முன்னால் பேர்கர் கடையை மீண்டும் போடுவதை நிறுத்திக் கொண்டதற்காக இக்லாஸுக்கும் அதன் தலைவர் ரிட்சுவானுக்கும் ‘முட்டையில்லாத தோசை’ ஒன்றை தயவு செய்து அனுப்புங்கள். அவர்களுக்கு வேகமும் இல்லை. உறுதியும் இல்லை என்பதை அது பிரதிபலிக்கும்.
ஆர்ஆர்: அந்த முட்டாள்தனமான பேர்கர் கடை, பின்புறத்தைக் காட்டும் உடற்பயிற்சிகள், இப்போது அதற்குப் பதிலடியாக தோசைக் கடை ஆகியவை உயர்ந்த பதவிகளை வகிக்கின்றவர்கள் கவனமாகச் சிந்தித்த பின்னர் பேசியிருந்தால் வந்தே இருக்காது.
அம்பிகா வீட்டுக்கு முன்னால் நிகழ்ந்த அந்த சட்ட விரோத நடவடிக்கைகள் பற்றி துணை ஐஜிபி-யும் கோலாலம்பூர் மேயரும் ஒரு கண்ணை மூடிக் கொண்டு விடுத்த மடத்தனமான அறிக்கைகள் தாங்கள் வகிக்கும் பதவிகளுக்கு சற்றும் பொருத்தமில்லாத வகையில் பொறுப்பற்ற முறையில் அவர்கள் நடந்து கொண்டிருப்பதற்கு நல்ல உதாரணங்கள்.
இனிமேல் அவர்கள் பேசுவதற்கு முன்னர் அல்லது நடவடிக்கை எடுக்கும் முன்னர் சிந்திக்க வேண்டும். அவர்கள் கட்சி அரசியலிலிருந்து விடுபட்டிருக்க வேண்டும்.
எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் அவற்றின் தலைவர்களை அவர்கள் எப்படி எதிர்நோக்க முடியும் ? பதவி துறப்பார்களா அல்லது ஒடி விடுவார்களா ? மலேசியாவை இறைவன் காப்பாற்றட்டும்.
கொதிக்கும் மண்: கோலாலம்பூர் மாநகராட்சி மன்றத்தின் வர்த்தக அனுமதி இல்லாமல் கோலாலம்பூரில் எந்த இடத்திலும் பேர்கர் கடையை அமைக்க முடியாது என்பதுதான் உண்மை நிலை. அப்படி அமைத்தால் அது அந்த மாநகராட்சி மன்றத்தின் சட்டங்களை மீறியதாகி விடும்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் டாத்தாரான் மெர்தேக்காவில் பேரணி நிகழ்வதற்குத் தடை விதித்ததைப் போல அந்த சட்ட விரோதக் கூட்டத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அமைதி விரும்பி: வர்கா அமானுக்கு நன்றி. அது சரியான நடவடிக்கை. பெர்க்காசா/பெக்கிடா/முன்னாள் இராணுவ வீரர்கள்/இக்லாஸ் போன்றவர்களின் நிலைக்கு தாழ்ந்து செல்லக் கூடாது. 13வது பொதுத் தேர்தலில் பிஎன் நம்பிக்கையை அவர்கள் சீர்குலைக்கட்டும்.
அடையாளம் இல்லாதவன்_3e06: தோசைக் கடையை நீங்கள் ரத்துச் செய்துள்ளது வருத்தமாக இருக்கிறது. தனிநபருடைய வீடுகளுக்கு முன்னாள் ஆர்ப்பாட்டம் செய்வது சரியே எனக் கூறியது எவ்வளவு மடத்தனமானது என்பதை துணை ஐஜிபி காலித் இன்னேரம் உணர்ந்திருப்பார் என்பது நிச்சயம்.
டிமோத்தி: அம்பிகா வீட்டுக்கு முன்னாள் “பேர்கர் ஆர்ப்பாட்டத்தை நடத்துவது “அவருக்கு பாடம் கற்பிப்பதற்காகும்” என ரிட்சுவான் சொல்கிறார். அதில் என்ன பாடம் இருக்கிறது என்பது எனக்குப் புரியவே இல்லை.
நீங்கள் அம்பிகாவை-ஒரு மாதுவை- அச்சுறுத்தவும் மிரட்டவும் நீங்கள் முயன்றதுதான் எங்களுக்குத் தெரிகிறது.
‘பின்புறத்தைக் காட்டிய’ ‘பேர்கர் கடையை நடத்திய’ நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கும் பேரப் பிள்ளைகளுக்கும் என்ன ‘kesopanan dan kesusilaan’-வைக் கற்றுக் கொடுக்கப் போகின்றீர்கள் ?
அந்த தோசைக் கடைக்காரர்கள் பின்புறத்தைக் காட்டியவர்களைக் காட்டிலும் பேர்கர் கடையை போட்டவர்களைக் காட்டிலும் முதிர்ச்சி அடைந்தவர்களாகத் தெரிகிறது. அவர்களிடமிருந்து தோசை போடக் கற்றுக் கொள்ளுங்கள். தோசையையும் சாப்பிடுங்கள்.
சக மலேசியன்: அந்த ரௌடிகளுக்கு ஊக்கமளித்த காலித்-தின் பெரிய வாய்க்குள் அந்த பேர்கர்களையும் தோசைகளையும் திணிக்க வேண்டும். துணை ஐஜிபி என்ற முறையில் உங்கள் பகுத்தறிவு எங்கே போனது ?