இலங்கையில் போர் முடிவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்த போதும் அங்கு வாழும் தமிழர்களின் துன்பங்கள் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன என்று அனைத்துலகச் செய்தி ஊடகமான ஏபி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர் இராணுவத்தினரின் வீதித் தடைகள் அகற்றப்பட்டு இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டுள்ளதாகவும், தற்போது இலங்கைத்தீவு மீண்டும் சுற்றுலாப் பயணிகளின் சொர்க்கமாகி வருகிறது என்றும் இலங்கை அரசு அறிவித்தபோதும் தமிழர்களின் தயாகப் பூமியான வடகிழக்கில் தமிழர்களின் துயரம் தொடர்ந்துகொண்டுதான் வருகிறது என்று ஏபி செய்தியாளர் கிருஸான் பிரான்ஸிஸ் தனது கட்டுரையில் தெரிவித்துள்ளார்.
வன்னியில் பல இடங்களில் பொதுமக்களின் காணிகளை இராணுவம் ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு விடுவிக்காமல் இருக்கின்றது என்று தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ள பிரான்சிஸ், தமிழர் பிரதேசங்களில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினருக்கு அஞ்சியே அம்மக்கள் வாழ்க்கை நடத்தவேண்டிய துர்பாக்கிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆயிரக்கணக்கானவர்கள் இன்னும் வீடற்று இருக்கிறார்கள் அத்துடன் போரின் பின்னர் இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணமல்போனவர்களை கண்டுபிடிப்பதற்கான எந்த நடவடிக்கைகளையும் இலங்கை அரசு இதுவரை மேற்கொள்ளவில்லை என்றும் அவர் தனது கட்டுரையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.