13வது பொதுத் தேர்தல் முடிவை, அதன் விளைவாக ஆட்சிமாற்றம் ஏற்படுவதாக இருந்தாலும், பிஎன்னும் அம்னோவும் மதிக்கும் எனப் பிரகடனம் செய்யத் தயாரா என்று பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குக்கு டிஏபி பெருந்தலைவர் லிம் கிட் சியாங் சவால் விடுத்துள்ளார்.
அவ்வாறு கூறுவது மலேசியாவை “உலகின் தலைசிறந்த ஜனநாயமாக்க” விரும்புவதாக நஜிப் அறிவித்துள்ளதற்கு ஏற்புடையதாகவும் இருக்கும் என்றாரவர்.
“உண்மையான, நேர்மையான நோக்கத்துடன்தான் அவ்வாறு அறிவித்தார் என்றால் மலேசியா ஒரு ஜனநாயக நாடுதான் என்பதையும் வாக்குப்பெட்டிகள்வழி ஆட்சிமாற்றம் ஏற்படுவது இங்கு வழக்கமான ஒன்றுதான் என்பதையும் அவர் செயலில் காண்பிக்க வேண்டும்”, என்றவர் இன்று ஓர் அறிக்கையில் கூறியிருந்தார்.
அடுத்த பொதுத் தேர்தலில் மக்கள் முடிவை மதிப்பதாக அரசாங்கமும் மாற்றரசுக் கட்சியும் கூட்டுப்பிரகடனம் ஒன்றை விடுக்க வேண்டும் என்று பிரபல கல்விமான்கள் 20பேர் விடுத்துள்ள அறிக்கைக்கு எதிர்வினையாற்றிய லிம் இவ்வாறு கூறினார்.
“தேர்தல் முடிவுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் முயற்சிகளைத் தடுக்கும் வகையில் மக்களின் முடிவை மதிப்பதாகவும் ஆட்சிமாற்றம் அமைதியான முறையில் நடந்தேறுவதை உறுதிப்படுத்துவதாகவும் அரசியல் தலைவர்களும் அரசியல் கட்சிகளும் ஒரு சிறு அறிக்கை வெளியிட வேண்டும் எனப் பரிந்துரைக்கிறோம்”, என்று அந்த அவ்வறிக்கை கூறியது.
அதை டிஏபி “முழுமையாக ஏற்கிறது” என்ற லிம், அரசாங்கமும் அவ்வாறே செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
“13வது பொதுத் தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பை, அதனால் புத்ரா ஜெயாவில் ஆட்சி மாறும் என்றாலும், பிஎன்னும் அம்னோவும் ஏற்றுக்கொள்ளும் என அறிவிக்க நஜிப் தயாரா?
“மலேசியாவை ‘உலகின் தலைசிறந்த ஜனநாயகமாக்க’ விருப்பம் கொண்டிருப்பதாக அறிவித்ததற்கு முரணாக புத்ரா ஜெயாவில் அம்னோ ஆட்சி அதிகாரத்தை எவ்வகையிலும் தற்காக்கப்போவதாக 2010 அம்னோ பேரவையில் முழங்கினாரே அதையும் மீட்டுக்கொள்ள அவர் தயாரா?”, என்று லிம் வினவினார்.
இக்கேள்வியை, ஜூன் 11-இல் நாடாளுமன்றத்தில், அது முன்கூட்டியே தேர்தலை நடத்துவதற்காக கலைக்கப்படாதிருந்தால், கேட்கப்போவதாகவும் லிம் தெரிவித்தார்.