பாதுகாவலருக்கு சீட் கேட்டு நடுவானில் விமானத்தில் கிலானி மகன் கலாட்டா

பாகிஸ்தான் தலைமையமைச்சர் யூசுப் ரசா கிலானியின் மகன், நடுவானில் விமானத்தில் தகராறு செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாகிஸ்தான் தலைமையமைச்சர் கிலானியின் மகன் அலி முசா, எம்.பி.யாக இருக்கிறார். இவர் அண்மையில் லாகூரில் இருந்து கராச்சிக்கு விமானத்தில் சென்றார். அவருடன் வந்த பாதுகாவலருக்கு எகானமி வகுப்பில் சீட் ஒதுக்கப்பட்டது.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் பாதுகாவலரை தன் அருகே அமரச் செய்யுமாறு அலி முசா கேட்டார்.  ‘பிஸினஸ் வகுப்பில் பாதுகாவலருக்கும் சீட் ஒதுக்க வேண்டும். தனது பாதுகாப்புக்காக வந்துள்ள அவரை வேறு இடத்தில் உட்கார வைப்பது எனது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும்’ என்று அலி முசா வாதிட்டார். என்ன செய்வதென்று தெரியாமல்  விமான பணியாளர்கள் விழித்தனர். அவர்களிடம் தகராறு செய்தார் அலி முசா.

கடைசி வரை இடம் ஒதுக்கப்படாததால் ஆத்திரம் அடைந்த முசா, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தகவல் அறிந்து வந்த இணை பைலட், முசாவை சமாதானப்படுத்த முயன்றார். அதிலும் அவர் சமாதானம் அடையாததால், விமானத்தை மீண்டும் லாகூருக்கே திருப்பி விடுவேன் என்று பைலட் எச்சரித்தார். அதிர்ச்சி அடைந்த முசா அமைதியானார்.

இதையடுத்து விமானம் கராச்சி சென்றது. இந்த தகவல் பாகிஸ்தான் பத்திரிகைகளில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.