சரத் பொன்சேகா சிறையிலிருந்து விடுதலையானார்!

இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதியும், கடந்த ஜனாதிபதி தேர்தலில் மகிந்தா ராஜபக்சேவை எதிர்த்துப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவருமான சரத் பொன்சேகா சிறைச்சாலையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வெலிக்கடை சிறைச்சாலைக்கு முன் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் அரசியல் பிரமுகர்களும் கூடிநின்று அவரை வரவேற்றுள்ளனர். பட்டாசு வெடிகள் கொளுத்தப்பட்டு, அந்தப் பிரதேசமே பொன்சேகா ஆதரவாளர்களால் நிரம்பிவழிந்ததாக செய்தியாளர்கள் கூறுகின்றனர்.

முன்னதாக, மருத்துவமனையிலிருந்து சிகிச்சை முடிந்து வெளியேறிய பொன்சேகா வெலிக்கடை சிறைச்சாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். கடந்த இரண்டு ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்துவரும் சரத் பொன்சேகாவை விடுதலை செய்ய தயார் என ஜனாதிபதி கடந்த வாரம் அறிவித்தார்.

சரத் பொன்சேகாவின் விடுதலை அறிவிப்பை அடுத்து நேற்று குறித்த பிரதேசம் முழுவும் சரத் பொன்சேகாவின் ஆதரவாளர்களாலும் ஊடகவியலாளர்களாலும் எதிரணி அரசியல் தலைவர்களாலும் நிரம்பியிருந்ததாக அங்கிருந்துவரும் தகவல்கள் கூறுகின்றன.

இலங்கை இறுதிக்கட்டப் போரின்போது தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு ராஜபக்சே மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் முக்கிய காரணமாக இருக்கின்றனர். போரின் முன்னர் தோழர்களாக இருந்த இவர்கள் இருவரும் போரின் பின்னர் போர் வெற்றிக்கு உரிமை கொண்டாடி ஜனாதிபதி தேர்தல் மூலம் பகைவர்களாக மாறினர்.

போரின்போது இடம்பெற்ற போர்குற்றங்களை அனைத்துலகத்திடம் சரத் பொன்சேகா காட்டிக்கொடுத்துவிடுவார் என்று அஞ்சிய ராஜபக்சே, பொன்சேகா மீது பல குற்றச்சாட்டுகளை சுமத்தி சிறையில் அடைத்தார். சிங்களவர்களால் போர் வீரர் என கருதப்பட்ட ஒருவரை சிறையில் அடைத்ததானது ராஜபக்சே அரசுக்கு சிங்களவர்கள் மத்தியில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

இதனை அங்குள்ள எதிர்கட்சிகள் தங்களுக்கு சாதமாக பயன்படுத்தி கொண்டமை குறிப்பிடத்தக்கது. சிங்களவர்கள் மத்தியில் தமக்கு ஏற்பட்டுள்ள அதிர்ப்தியை சரிக்கட்டும் வகையில் பொன்சேகாவை விடுதலை செய்திருக்கும் ராஜபக்சேவிற்கு பொன்சேகாவை விடுதலை செய்யயும்படி அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்துவந்ததாக இன்னுமொரு தகவல் கூறுகிறது.

சரத்பொன்சேகா மீண்டும் அரசியலில் இணைவாரா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. காரணம் ராஜபக்சே அதற்கான நிபந்னைகளை விதித்த பின்னரே அவரை விடுதலை செய்திருப்பார் என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.

எதுஎவ்வாறாயினும் பொன்சேகா எதிர்கட்சிக் கூட்டணியில் இணைந்து அரசியலில் ஈடுபட்டால் மகிந்தா அரசு ஆட்டம் காணும் என்பதோடு மகிந்தாவை எதிர்க்க சிங்களர்வர்களுக்குள் ஒருத்தர் இருப்பது இலங்கையிலுள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்கு சாதகமாக அமையும்.

TAGS: