பார் போற்றும் ஒரு பெண்ணுக்கு எதிராக ஈனச்செயல்களா?, கண்டிக்கிறார் சேவியர்

பெர்சே தலைவர் அம்பிகாவிற்கு எதிராகக் கேவலமான ஆர்ப்பாட்டத்தில் இந்தியர்களும் இணைவதா? அவரின் குடியுரிமை மற்றும் பட்டத்தைப் பறிக்கச் சொல்லவும், ஈம சடங்குகளை நடத்தி ஆர்பாட்டத்தில் இறங்கியுள்ளதன் வழி பெர்காசவுக்கும், அம்னோவிற்கும் துணை போன ம.இ.கா மற்றும் பி.பி.பி உறுப்பினர்கள் கண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறினார்.

சேவியர் கேட்கிறார்: “இந்நாட்டில் எதற்கெல்லாமோ எவரெவரோ குரல் கொடுக்கிறார்கள், ஆனால் ஜனநாயகம் ஓங்க, நீதிக்குக் குரல்கொடுப்பதற்கு சட்டம் படித்த ஓர் இந்திய பெண்ணுக்கு உரிமையில்லையா?”

அம்பிகாவை அவமதித்ததின் வழி இந்திய தாய்மார்களுக்கு மிகுந்த அவமரியாதை செய்துவிட்டவர்கள் மீது இக்கட்சிகளின் இரு  இந்திய தலைவர்களும் நடவடிக்கைகள் எடுப்பார்களா என்று வினவினார்.

இந்நாட்டில் நீதி நிலைபெற, நேர்மையான தேர்தல் வழி இந்நாட்டில்  அமைதியும்  ஜனநாயகமும் தொடர்ந்து பேணி காக்கப்பட வேண்டும். ஜனநாயக வாக்களிப்பு முறையைக் கீழறுக்க கூடிய எல்லா குதற்கச் செயல்களையும் விட்டொழிக்க அனைவரின் நன்மைக்கும் குரல் கொடுக்க ஓர் இந்திய பெண்ணுக்கு உரிமையில்லையா என்று மேலும் வினவினார்.

அதே பேரணியை மற்றவர்களும் முன்நின்று நடத்தியுள்ளனர். ஆனால், ஓர் இந்திய பெண்ணான அம்பிகாவை மட்டும் குறிப்பிட்டு தாக்குவது அவர் பெண் என்பதாலா அல்லது இந்தியர்கள் சிறும்பாண்மையினர் என்பதாலா என்பது தெரிய வேண்டும் என்றாரவர்.

“நீதிக்காக போராடும், பார் போற்றும் ஓர் இந்தியப் பெண்ணுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட ஈனச்செயல்களைக் கண்டிக்கத்தான் ம.இ.கா மற்றும்  பி.பி.பி போன்ற கட்சி உறுப்பினர்களுக்குத் துணிவில்லை, குறைந்தது அம்பிகாவின் செயலில் உள்ள நீதியையாவது கலாட்டாக்காரர்களுக்கு எடுத்துச் சொல்லியிருக்கலாம். தன் பங்காளி கட்சிகளுக்கு எடுத்துச் சொல்லத்தான் துணிவில்லை, குறைந்தது  ம.இ.கா மற்றும் பி.பி.பி கட்சி உறுப்பினர்கள் இந்தத் துஷ்ட செயல்களிலிருந்து  ஒதுங்கியாவது இருக்க அவர்களுக்கு அக்கட்சிகளின் தலைவர்கள் ஆலோசனைகள் வழங்கியிருக்க வேண்டாமா என்று சேவியர் கேட்டார்.

இந்திய சமுதாயத்தின் மீது அக்கறை இருந்தால்,  இதுபோன்ற இனதுவேச செயல்களுக்கும் பண்பற்ற செய்கைகளுக்கும் துணை போனவர்களின் செயல்களையும், அம்னோவின் துஷ்டத்தனத்தையும்  ம.இ.கா தேசியத்தலைவர் பழனிவேலுவும் பி.பி.பி.யின் தலைவர்  கேவியசும் கண்டிக்க வேண்டும் என்றார்  டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.