பெர்சே 3.0 சேதம்: அரசாங்கம் அம்பிகா மீது வழக்கு தொடர்ந்துள்ளது

ஏப்ரல் 28 இல் நடந்த பெர்சே 3.0 பேரணியால் விளைந்ததாக கூறப்படும் சேதத்திற்காக பெர்சே 3.0 இணைத் தலைவர் அம்பிகா மற்றும் ஒன்பது பேருக்கு எதிராக அரசாங்கம் சிவில் வழக்கை தொடர்ந்துள்ளது. மே 15 இல் அந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

வழக்கில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள 10 பேரில் பெர்சே 3.0 இன் இன்னொரு இணைத் தலைவர் சாமாட் சைட் மற்றும் வழிகாட்டல் குழு உறுப்பினர் ஹிசாமுடின் ரயிஸ் ஆகிய இருவரும் சேர்க்கப்படவில்லை.

“இன்று, பிற்பகல் சுமார் 3.25 அளவில் அந்த  வழக்கு குறித்த நீதிமன்ற ஆணை (writ) மற்றும் மலேசிய அரசாங்கத்தின் கோரிக்கை அறிக்கை என்னிடம் சார்வு செய்யப்பட்டது. அதில் பெர்சேயின்போது ஏற்பட்ட இழப்புகளுக்கு என்னிடமிருந்தும் இதர வழிகாட்டி குழு உறுப்பினர்களிடமிருந்தும் இழப்பீடு கோரப்பட்டுள்ளது”, என்று தொடர்பு கொண்டபோது அம்பிகா கூறினார்.

இந்த இழப்பீடு கோரிக்கை புதிய அமைதியாகக் கூடுதல் சட்டம் 2012 இன் கீழ் வரக்கூடும் என்று அவர் மேலும் கூறினார்.

அந்த நீதிமன்ற ஆணையில்  “அளவுக்கு அதிகமான” ஆர்ப்பாட்டக்காரர்களைக் கொண்டு வந்த பெர்சே வழிகாட்டல் குழு உறுப்பினர்கள் அந்த ஆர்ப்பாட்டம் அமைதியானதாக இருப்பதை உறுதிப்படுத்துவதற்கு போதுமான பணியாளர்களை நியமிக்கத் தவறிவிட்டனர் என்று அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அந்த சிவில் வழக்கில் இரண்டு நீர் பாய்ச்சும் பீரங்கிகள் உட்பட 15 போலீஸ் வாகனங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு சிறப்பு இழப்பீடாக ரிம122,000.00 கோரப்பட்டுள்ளது.

“பொதுச் சேதங்களுக்கு இழப்பீடு கோரப்பட்டுள்ளது. அது எவ்வளவாக வேண்டுமானாலும் இருக்கலாம்”, என்று அம்பிகா கூறினார்.

“அமைதியாகக் கூடுதல் சட்டம் 2012 செக்சன் 6(2)(g)இன் கீழ் பிரதிவாதிகளுக்கு இருக்கும் பொறுப்புகளில் அந்த பேரணி சொத்திற்கு எவ்வித  சேதத்தையும் ஏற்படுத்தாமல் இருப்பதை உறுதிசெய்வதும் அடங்கும்”, என்று அந்த நீதிமன்ற ஆணையில் கூறப்பட்டுள்ளது.

பேரணி நடந்த அன்று, பிற்பகல் மணி 3.30 லிருந்து 5.30 க்கு இடையில் நடந்த 9 சம்பவங்கள் அந்த ஆணையில் பட்டியலிடப்பட்டுள்ளது.

ஜூன் 13 இல் காலை மணி 9.00 க்கு அந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி டாக்டர் பிரசாத் சந்தோசம் அப்ரஹாம் முன்பு குறிப்பிடப்படும்.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் நாளை சந்திக்கவிருப்பதாகவும் அப்போது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கபப்டும் என்று அம்பிகா தெரிவித்தார்.

“நமக்கு சில வழக்குரைஞர்கள் இருப்பார்கள். ஆனால் இதர உறுப்பினர்கள் அதே வழக்குரைஞர்களை விரும்புவார்களா என்பதை அவர்கள் தீர்மானிக்க வேண்டும்”, என்றாரவர்.

வழக்கில் பெயர் குறிப்பட்ட மற்ற ஒன்பது பேர்கள்: மரியா சின் அப்துல்லா, ஸைட் கமாருடின், ஹேரிஸ் பாத்தில்ல முகம்மட், கே.ஆறுமுகம், எஸ். அருள் பிரகாஷ், வோங் சின் ஹுவாட், டாக்டர் அஹமட் பாருக் மூசா, தோ கின் வூன் மற்றும் அண்ட்ரூ கூ.