பயங்கரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கைகளை நாடுகள் உருவாக்குகின்றபோது, அவை மனித உரிமைகளைப் பற்றி கவலையே படுவதில்லையென்று இலங்கையைச் சுட்டிக்காட்டி ஐ.நாவின் மனித உரிமைகளுக்கான ஆணையர் நவநீதம்பிள்ளை கருத்து தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தொடரின் 18-வது அமர்வில் உரையாற்றிய நவநீதம்பிள்ளை, அரசுகளின் இவ்வாறான நடவடிக்கைகளே மனித உரிமைகள் பறிக்கப்படவும் வன்முறைக் கலாசாரம் தலையெடுக்கவும் காரணமாவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இலங்கை அரசாங்கத்தை உதாரணத்துக்கு சுட்டிக்காட்டிய நவநீதம்பிள்ளை, இலங்கையில் தொடர்ந்தும் அமலில் உள்ள பாதுகாப்புடன் தொடர்புடைய அனைத்து வகையான சட்டங்கள் பற்றியும் விரிவான மீளாய்வொன்றை அரசு செய்ய வேண்டுமென்று கடுமையாக கேட்டுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இலங்கை மூன்று தசாப்தங்களாக பயங்கரவாதத்தின் கொடுமையான பாதிப்புகளுக்கு முகங்கொடுக்க வேண்டியேற்பட்டது என்றாலும், அந்நாட்டில் அடுத்தடுத்து பதவிக்கு வந்த அரசாங்கங்களின் பதில் நடவடிக்கைகள் சுயாதீனமான நிறுவனங்களின் பணிகளையும் மனித உரிமைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியையும் மழுங்கடிங்கும் விதத்திலேயே அமைந்ததாகக் நவநீதம்பிள்ளை குற்றஞ்சாட்டினார்.
இதன்போது, சில அவசரகால ஒழுங்கு நடவடிக்கைகளை நீக்குவதற்கு இலங்கை குடியரசுத் தலைவர் எடுத்த முடிவை சுட்டிக்காட்டிய ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையர், இலங்கையில் நடைமுறையிலுள்ள எல்லாவகையான பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் மற்றும் தடுப்புக் காவல்கள் பற்றி விரிவான மீளாய்வொன்றை இலங்கை அரசு செய்ய வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.