இலங்கைப் பிரச்னையில் தமிழர்களுக்கு ஆதரவாக அனைத்துலகச் சூழல் மாறி வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூறியுள்ளது.
இலங்கைக்குள்ளாகவே பரந்துபட்ட சுயாட்சி அதிகாரம் தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று கோரியிருக்கும் கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன், “எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் தாய் மண்ணை ஆட்சி செய்யவும், சொந்த மக்களைப் பாதுகாக்கவும், தங்களது பொருளாதாரத்தை மேம்படுத்தவும் தமிழர்களுக்கு உரிமை வழங்கப்பட வேண்டும்” என்றார்.
மட்டக்களப்பு நகரில் நடந்த கூட்டமைப்பின் 14-வது ஆண்டு மாநாட்டில் பேசியபோது அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.
கடந்த 30 ஆண்டு காலப் போராட்டம் ரத்தம், கண்ணீர், வீரம், ஏக்கம், பேரழிவு ஆகியவற்றால் எழுதப்பட்ட அத்தியாயம் எனக் குறிப்பிட்ட அவர், இந்தக் காலகட்டத்தில் தமிழர்களின் மாபெரும் சக்தியாக விடுதலைப்புலிகள் இயக்கம் எழுச்சி பெற்றது என்றார்.
“இலங்கைத் தமிழர்களின் அரசியல் போராட்டத்தில் இந்தியாவின் தலையீடு தவிர்க்க முடியாத அம்சம். தங்களது நலனுக்கு ஒவ்வாத எந்தவொரு அரசியல் தீர்வையும் இந்தியா வரவேற்காது என்பதை இந்தத் தலையீடு நமக்குத் தெளிவாக கற்றுத் தந்தது.
அதே நேரத்தில் ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்கள் கெளரவமாக வாழ்வதற்கான அரசியல் தீர்வைக் காண்பதற்குரிய வாய்ப்புகளை இந்தியாவின் உதவியுடனும் ஆசியுடனும் நாம் பெற்றோம்.
இந்தியாவுடன் நாம் கருத்து வேறுபாடு கொண்டதால், கடந்த 20 ஆண்டுகளில் தமிழர் பிரச்னையிலிருந்து அந்த நாடு விலகியே இருந்து வருகிறது என்பதுடன், சில நேரங்களில் எதிராகவும் செயல்பட்டிருக்கிறது. இந்த வரலாற்றை நாம் மறந்துவிடக்கூடாது. இதேபோல மீண்டும் செயல்பட்டு அனைத்துலகச் சமூகத்தின் எதிர்ப்பைச் சம்பாதித்து விடக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும்.
தமிழர் பிரச்னைக்காக மேலும் பல உயிர்களைத் தியாகம் செய்வதற்குப் பதிலாக, ஒருங்கிணைந்த இலங்கைக்குள் நமது அடிப்படை உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் வாழும் வகையிலான தீர்வைக் காண்பதற்கான நடவடிக்கைகளை கூட்டைமைப்பு முன்னெடுத்தது.
கடந்த காலங்களில் இந்தியாவும் அமெரிக்காவும் தமிழர்களுக்கு எதிராக நின்றன. இப்போது அனைத்துலகச் சூழல் நமக்குச் சாதகமாக மாறியிருக்கிறது. எதிர்த்து நின்ற இரு நாடுகளும் நமக்கு ஆதரவாகத் திரும்பியிருக்கின்றன.
ஐ.நா மனித உரிமை ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானத்தை ஆதரித்து இந்தியா வாக்களித்ததை நமக்குச் சாதகமான மிகப்பெரிய திருப்பமாகக் கருதலாம்” என்றார் சம்பந்தன்.