ஜனநாயகம் மலர்ந்துவிட்டது என்று இலங்கை பிதற்றிக்கொள்கிறது

உண்மையில் இலங்கையில் போர் நிறைவடைந்து விட்டது ஜனநாயகம் மலர்ந்து விட்டது என்றால் அரசியல் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்படவேண்டும், காணாமல் போனோருக்கான தீர்வொன்று வழங்கப்படவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோரின் உறவினர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் உறவினர்களின் விடுதலையை வலியுறுத்தி மனு ஒன்றினை யாழ்.மாவட்டச் செயலக அதிகாரியிடம் கையளித்தனர்.

போர் முடிந்த பின்னரும் தமிழர்களுடைய மனங்களை வென்றெடுக்க இலங்கை அரசாங்கத்தினால் முடியவில்லை. போர் முடிந்து விட்டது, நாட்டில் ஜனநாயகம் மலர்ந்துவிட்டது என்றெல்லாம் இலங்கை அரசு பிதற்றிக் கொள்கிறது.

ஆனால் இன்று வரைக்கும் காணாமல்போனோவர்கள் தொடர்பிலும் கைதுசெய்யப்பட்டவர்கள் தொடர்பிலும் எந்தவிதமான தீர்வு கிடைக்கவில்லை. காரணம் அவர்கள் அனைவரும் தமிழர்களாக இருப்பது மட்டுமே; இலங்கை அரசு தமிழரை எந்த நிலையில் வைத்திருக்கின்றது என்பதை இந்த ஒரு விடயத்திலிருந்து நாம் நன்றாக அறிந்து கொள்ளமுடியும் என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கூறினார்.

ஜே.வி.பி கிளர்ச்சியாளர்களை எந்தவிதமான நிபந்தனைகளும் இன்றி விடுதலை செய்த இலங்கை அரசாங்கம் இன்று தமிழர்களை மட்டும் இன்னும் அடைத்து வைத்து சித்திரவதைப்படுத்துகின்றது. இந்த அரசாங்கம் தமிழர்களுக்கு எந்த விதத்திலும் உதவப் போவது கிடையாது என அவர் சுட்டிக்காட்டினார்.