மனித உரிமை மன்றத்தில் இலங்கைக்கு 39 நாடுகள் ஆதரவு?

47 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றத்தில் 39 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாக இருக்கின்றன என்று ஜெனீவாவில் இருக்கும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

மன்றத்தின் 18-வது கூட்டத் தொடர் நேற்று ஆரம்பமாவதற்கு முன்னதாகக் கடந்த வெள்ளிக்கிழமை தாம் நடத்திய சந்திப்புக்களில் “மிகச் சாதகமான மறுமொழி” தமக்குக் கிடைத்ததாக அவர் கூறினார்.

“மதிய வேளையில் 29 நாடுகளினதும் மாலையில் 10 நாடுகளினதும் பிரதிநிதிகளை நாம் வெள்ளியன்று சந்தித்துப் பேசினோம். இதற்கான விசேட நிகழ்வு இலங்கை அரசால் ஏற்பாடு செய்யப்பட்டது. மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா, ஆபிரிக்கா ஆகிய பகுதிகளில் உள்ள நாடுகள் எமக்குச் சாதமாகப் பதிலளித்துள்ளன” என்றார் அமைச்சர் பீரிஸ்.

போர் முடிந்த குறுகிய காலத்துக்குள் இலங்கை அடைந்துள்ள இலக்குகளை அறிவதில் அந்தப் பிரதிநிதிகள் மிக ஆர்வமாக இருந்தார்கள் என்றும் அவர் கூறினார்.

ஐ.நா. கூட்டத் தொடர்களில் எந்த விடயம் விவாதிக்கப்பட முடியும் எத்தகைய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட முடியும் என்பன தொடர்பில் மிகக் கடுமையான சட்ட திட்டங்கள் உள்ளன. அப்படிப்பட்ட நிலையில் ஐ.நாவின் செயல்பாடுகளில் எத்தகைய குறைகளும் ஏற்படாமல் விழிப்பாக இருங்கள் என்று அந்த நிகழ்வுகளில் உரையாற்றிய அமைச்சர் மஹிந்த சமரசிங்க கேட்டுக் கொண்டார் எனவும் அமைச்சர் பீரிஸ் கூறினார்.

2012-ம் ஆண்டு நடைபெறவுள்ள 19-வது கூட்டத் தொடர் வரைக்கும் இலங்கைக்குக் கால அவகாசம் கொடுக்கப்பட வேண்டும் என்றும் மனித உரிமைகள் மன்றத்தின் உறுப்பு நாடுகளிடம் கேட்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

TAGS: