இலங்கை அரசுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பகிரங்க கோரிக்கை!

போருக்குப் பின்னரான காலப்பகுதியில் இலங்கையில் மேற்கொள்ளப்படும் அமைதி முயற்சிகள் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் மன்றத்தில் இலங்கை அரசாங்கம் சமர்ப்பித்த அறிக்கைக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இனங்களுக்கு இடையே நம்பிக்கையையும் நட்புறவையும் கட்டி எழுப்பும் வகையிலான நல்லிணக்க அணுகுமுறையை இலங்கை அரசு அழுத்தமாகக் கடைப்பிடிக்கிறது என்று அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவாவில் நேற்று முன்தினம் ஆற்றிய உரைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு, இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் அனுபவங்கள் அமைச்சரின் கூற்றுக்குச் சற்றும் பொருந்தாது என்றும் அடித்துக் கூறி உள்ளது.

நாட்டின் நிலவரத்தை அனைத்துலகச் சமூகத்துக்குத் தெரியப்படுத்தும்போது அரசு மிக நேர்மையாகவும் பொய்யற்ற வகையிலும் நடந்துகொள்ள வேண்டும் என்று கூட்டமைப்பு நேற்று விடுத்த அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனின் கையெழுத்துடன் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, போர் முடிந்ததன் பின்னர் இலங்கையில் தமிழர்கள் எப்படி மேலும் சிறுமைப்படுத்தப்படுகிறார்கள் என்ற விவரங்களை விலாவாரியாகச் சுட்டிக்காட்டுகிறது.

குறிப்பாக குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சே நியமித்த நல்லிணக்கத்துக்கான கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழு, வழங்கிய இடைக்கால அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளைக்கூட இதுவரை அரசு நடைமுறைப்படுத்தவில்லை என்று கூட்டமைப்பு அவ்வறிக்கையில் குற்றஞ்சாட்டி உள்ளது.

ஆணைக்குழுவின் பரிந்துரைகளை எந்தவிதத் தாமதங்களும் இன்றி செயற்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜெனீவாவில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க உரையாற்றிய அதே நாளில் அந்தப் பரிந்துரைகள் வெளியிடப்பட்டு ஒரு வருடம் பூர்த்தியாகி இருந்தது.

13 செப்டெம்பர் 2010-ல் அந்தப் பரிந்துரைகள் வெளியிடப்பட்டிருந்தன என்று அறிக்கை கூறுகின்றது. தனது சொந்த ஆணைக்குழுவின் பரிந்துரைகளையே இலங்கை அரசு நடைமுறைப்படுத்தத் தவறி இருப்பதானது பொறுப்புக்கூறுதல் மற்றும் நல்லிணக்கத்துக்காக நேர்மையான, நம்பகத்தன்மை வாய்ந்த, சுயாதீனம் வாய்ந்த பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி நிற்பதாக கூட்டமைப்புக் கூறியுள்ளது.

அமைச்சர் மஹிந்த சமரசிங்க நல்லிணக்கம் பற்றி ஜெனீவாவில் உரையாற்றியபோதும் போரின் பின்னர் கூட தமிழ் மக்கள் மீது வன்முறைகள் ஏவப்பட்டுக்கொண்டே இருக்கின்றன என்று அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இடம்பெயர்ந்த 2 இலட்சம் மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர அனுமதி மறுப்பது விவசாய மற்றும் தனியார் நிலங்களை இராணுவமும் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்களும் பலவந்தமாகப் பறிப்பது, எந்தப் பகிரங்க அறிவித்தல்களும் இன்றி வடக்கு கிழக்கில் உள்ள அரச நிலங்களை பெரும்பான்மையினருக்குப் பகிர்ந்தளிப்பது, இனப்பரம்பலில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடிய வகையில் சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வது, இந்து கிறிஸ்தவ கலாசாரப் பாரம்பரியங்களை இழிவுபடுத்தி அவற்றை பெரும்பான்மையின அடையாளங்களுக்கு உரியதாக்குவது, எதிர்க்கட்சிகள் மீது நன்கு திட்டமிட்ட ரீதியல் வன்முறைகளைப் பயன்படுத்துவது, வடக்கு கிழக்கில் பொதுமக்களின் ஜனநாயக உரிமையான ஆர்ப்பாட்டங்கள் எதிர்ப்பு நடவடிக்கைகளை அரச படையினரைப் பயன்படுத்தி தடுப்பது, சிறுபான்மை இனங்களை ஒடுக்கும் ஓர் ஆயுதமாகப் பெண்கள் மீதான வன்முறைகளை மேற்கொள்வது போன்றவற்றை தமிழ் மக்கள் மீதான அண்மைக் கால வன்முறைகளாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

TAGS: