ஈழத்தில் நடப்பதை சித்தரிக்கும் ‘கண்ணீர் புஸ்பங்கள்’

இலங்கையில் தமிழர் தாயகப் பிரதேசங்களில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள கிரீஸ் பூதங்கள் என்று கூறப்படும் மர்மமனிதர்களின் குற்றச்செயல்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

மலையகம் தொடங்கி மட்டக்களப்பு, அம்பாறை என கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளில் இடம்பெற்று வந்த மர்ம மனிதர்களின் அட்டகாசங்கள் தற்போது வட மண்ணில் வலம் வந்துகொண்டிருக்கிறது.

குறிப்பாக பெண்களை மறைந்திருந்து தாக்கிவிட்டுச் தப்பிச் செல்லும் இந்த மர்ம நபர்களுக்கு சிங்கள இராணுவத்தினர் முழு ஆதரவு அளிப்பதோடு மக்களிடம் மாட்டிக்கொள்ளும் அவர்களை காப்பாற்றிச் செல்கின்றனர். அத்துடன் அந்த குற்றச்செயல் சம்பவங்களில் ஈடுபடும் பலர் இராணுவத்தினர் என அங்குள்ள மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இதனால் பலமுறை மக்களுக்கும் இராணுவத்திக்கும் இடையே மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இவ்விவகாரம் தொடர்பில் தமிழ்க்கட்சிகள் இலங்கை குடியரசுத் தலைவர் மகிந்த ராஜபக்சேவின் கவனத்திற்கு கொண்டு சென்றபோதிலும் அது ‘செவிடன் காதில் ஊதிய சாங்கு’ போன்றே உள்ளது.

தமிழர்கள் மீது சிங்கள அரசு கட்டவிழ்த்து விட்டிருக்கும் அடக்குமுறைகள் குறித்து சித்தரிக்கும் குறும்படங்கள் அடங்கிய ‘கண்ணீர் புஸ்பங்கள்’ என்ற காணொளி இசைத் தொகுப்பை லண்டனில் வசிக்கும் கவிஞர் ராஜேந்திரகுமார் கந்தசாமி எழுதி வெளியிட்டுவருகிறார்.

இந்த காணொளித் தொகுப்பின் அகதியின் குரல் 6-ம் பாகம் அண்மையில் வெளியிடப்பட்டது. அகதியின் குரல் 6-ல் ஈழத்தில் இடம்பெற்றுவரும் மர்மமனிதர்களின் குற்றச்செயல்கள் குறித்து சித்தரிக்கப்பட்டிருந்தது. அத்துடன் இதில் வரும் பாடலை கவிஞர் ராஜேந்திரகுமார் கந்தசாமி எழுத ஜப்பாரின் இசையில் பின்னனி பாடகி அனுராத ஸ்ரீராம் பாடியிருந்தார்.

‘கண்ணீர் புஸ்பங்கள்’ காணொளித் தொகுப்பை தொடர்ந்து வெளியீட்டு வரும் கவிஞர் ராஜேந்திரகுமார் கந்தசாமி, “ஒரு குடையின் கீழ் இணைவோம் தமிழர்கள்” அமைப்பை வழிநடத்தி செல்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.