சிறீ லங்காவை நெருக்கும் மனித உரிமை அமைப்புக்கள்

ஐ.நா. மனித உரிமைக் கூட்டத் தொடரில் சிறீ லங்கா தொடர்பிலான தங்களது கடுமையான நிலைப்பாட்டினை அனைத்துலக மனித உரிமை அமைப்புக்கள் வெளிப்படுத்தி வருவதாக கூட்டத் தொடரில் பங்கெடுத்திருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

Lawyers Rights Watch Canada, Asian Forum for Human Rights and Development, Amnesty International போன்ற மனித உரிமை அமைப்புக்கள் சிறீ லங்கா அரசு மனித உரிமைகளை மீறியுள்ளதாக  கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன.

போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையிலும் சிறீ லங்காவில் மனித உரிமை மீறல்கள் இன்னும் முடிவுக்கு கொண்டுவரப்படவில்லை என்பதை தமது அமைப்பு தரவுகளுடன் நிருபித்துள்ளதாக அனைத்துலக பொது மன்னிப்பு சபை (Amnesty International) பிரதிநிதி தெரிவித்தார்.

சிறீ லங்கா அரசின் முக்கிய பதவிகளில் உள்ளவர்களின் அனுசரணையுடன் மனித உரிமைகள் அப்பட்டமாக மீறப்படுவதாகவும் அதை செய்பவர்கள் தண்டனையில் இருந்து தப்ப வசதிகள் செய்து  கொடுக்கப்படுவதாகவும்  அந்த பிரதிநிதி குற்றம் சுமத்தினார்.

ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அவர்கள் தமது நிபுணர்க் குழு தயாரித்து அளித்த சிறீ லங்காவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான அறிக்கையை, மனித உரிமை பேரவையின் இக்கூட்டத் தொடருக்கு சமர்பித்திருப்பதை தாம் வரவேற்பதாகவும்  அனைத்துலக பொதுமன்னிப்பு சபை பிரதிநிதி தெரிவித்தார்.

சிறீ லங்கா அரசினால் அமைக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு சுயாதீன தன்மை அற்றது எனவும் அதன் அதிகாரங்கள்  போர்குற்ற  விசாரணைகளை  நடத்த போதுமானதல்ல என தாம் நம்புவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

TAGS: