கொழும்பு சிறையில் தமிழ் கைதிகள் மீது தாக்குதல்

இலங்கையில் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் மீது சிங்கள கைதிகள் தாக்குதல் நடத்தியதாக அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. இத்தாக்குதலில் 6 தமிழ் கைதிகள் காயமடைந்ததாக அந்த தகவல்கள் கூறியுள்ளன.

குற்றச்செயல்களுக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள சிங்கள கைதிகளுடன் தமிழ் அரசியல் கைதிகளை தங்க வைப்பதாலேயே இத்தகைய சம்பவங்கள் இடம்பெறுவதாக பல தரப்பாலும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

இப்படியான ஒரு சம்பவம் அங்கு நடந்ததாக ஒப்புக்கொள்ளும் இலங்கை புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சின் சிரேஷ்ட ஆலோசகரும் பேச்சாளருமான சிவலிங்கம் சதீஸ்குமார், அந்தச் சம்பவம் குறித்து விசாரணைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள் என்றும் கூறினார்.

இடப்பற்றாக்குறை காரணமாகவே இப்படியான சம்பவம் அங்கு இடம்பெற்றதாக கூறும் அவர், கொழும்பு சிறைச்சாலைகளில் உள்ள இடப்பற்றாக்குறையைப் போக்க கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவது குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

TAGS: