பத்து ஆண்டுகளுக்கும் அதிகமாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப் புலி சந்தேகநபர் ஒருவரை விடுதலை செய்யுமாறு கொழும்பு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறையினரிடம் இவர் கொடுத்திருந்த குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தை இவருக்கு எதிரான சாட்சியமாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
அரசாங்கத்துக்கு எதிராக தாக்குதல் ஒன்றை நடத்த வெடிப்பொருட்களை சேகரித்ததாக குற்றம்சாட்டி சந்திரகுமார் ராபர்ட் புஷ்பராஜன் என்பவர் 2000-ம் ஆண்டு நீர்கொழும்பு பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டிருந்தார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் காவல்துறையினருக்கு இவர் வழங்கிய குற்ற ஒப்புதல் வாக்குமூலம் இவருக்கு எதிரான சாட்சியமாக வழக்கில் பயன்படுத்தப்பட்டிருந்தது.
இந்த வாக்குமூலம் இவர் தன்னிச்சையாக வழங்கியதுதான் என நிரூபிக்க அரச தரப்பு வழக்கறிஞர் தவறிவிட்டதாக உயர்நீதிமன்ற நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தேகநபரிடமிருந்து வெடிப்பொருட்கள் பலவற்றைக் கைப்பற்றியதாக காவல்துறையினர் கூறினர். ஆனால் அதனை சாட்சிகள் மூலம் நிரூபிக்க காவல்துறையினர் தவறிவிட்டதாகவும் நீதிபதி சுனில் ராஜபக்சே குறிப்பிட்டிருந்தார்.
குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படாத நிலையில் புஷ்பராஜன் விடுவிக்கப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் இன்றும் பல அப்பாவி புஷ்பராஜன்கள் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டு சிறையில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.