இலங்கையில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று சனிக்கிழமை பிணை வழங்கியது.
நேற்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்ட கைது செய்யப்பட்ட இவர்கள் இன்று பகல் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இலங்கை அரசாங்கத்துக்கு அபகீர்த்தி ஏற்படுத்தக்கூடிய விதத்தில் செய்திகளை வெளியிட்டதாக கூறி லங்காமிரர் செய்தி இணையதள ஊடகவியலாளர்கள் உட்பட 8 பேர் கடந்த வெள்ளிக்கிழமை இலங்கை பாதுகாப்பு செயலாளரின் உத்தரவுக்கமைய காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
இலங்கை குற்றவியல் சட்டத்தில் உள்ள தண்டனைச் சட்டக்கோவையின் 115, 118 மற்றும் 120 ஆகிய பிரிவுகளின் கீழ் கைதுசெய்யப்பட்டவர்களுக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறினர்.
ஆனால் தண்டனைச் சட்டக்கோவையின் 118ம் பிரிவு, 2002-ஆம் ஆண்டிலேயே இலங்கை குற்றவியல் சட்டத்திலிருந்து நீக்கப்பட்டுவிட்டது என்று சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சாலிய பீரிஸ் சுட்டிக்காட்டுகிறார்.
இலங்கை நாடாளுமன்றத்தால் ரத்துசெய்யப்பட்ட சட்டவிதிகளின் கீழ் சந்தேகநபர்களை காவல்துறையினர் கைதுசெய்திருப்பது செல்லாது என்று வழக்கறிஞது சாலிய பீரிஸ் வாதிட்டார். இந்த வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதவான், கைதுசெய்யப்பட்டவர்களை பிணையில் செல்ல அனுமதிக்குமாறு உத்தரவிட்டார்.
இந்தக் கைது நடவடிக்கையை மேற்கொண்ட காவல்துறையினருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். ஊடக சுதந்திரம் மீதான தாக்குதலாக இந்தக் கைது நடவடிக்கை கண்டிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.