இலங்கையில் காணாமல் போனவர்கள் குறித்து ICRC கவலை

இலங்கையில் போர் முடிந்து மூன்று ஆண்டுகளுக்கு மேலாகியும் காணாமல் போனவர்களின் நிலமை குறித்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்ததாக இலங்கை அரசு தெரிவித்த பிறகும் கூட, இன்னும் 15,000-க்கும் அதிகமானவர்கள் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் 2011 ஆம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐசிஆர்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் இலங்கையில் போருக்கு பின்னரான காலகட்டத்தில் இன்னும் 15,780 பேரில் நிலை என்ன ஆனது என்பது இன்னும் தெளிவில்லாமல் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களின் பட்டியலில் 751 பேர் மகளிர், 1494 பேர் சிறார்கள் எனவும் அந்த அமைப்பின் அறிக்கை தெரிவிக்கிறது.

போர் முடிந்த பிறகு சுமார் 2,80,000 பேர் அரச முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர் எனவும், அதில் பெரும்பாலானவர்கள் தமது சொந்த இடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறும் ஐ சி ஆர் சி யின் அறிக்கை, இன்னும் ஆயிரக்கணக்கானவர்களின் நிலை கேள்விக் குறியாகவே உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதன் காரணமாக இன்னும் கணக்கில் வராதவர்களின் விதி குறித்து ஒரு உறுதியான தகவலை உறவினர்களால் பெற்றுக் கொள்ள முடியாமல் உள்ளது எனவும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் கூறுகிறது

TAGS: