சிறையில் தமிழ்க் கைதி அடித்துக்கொலை; பலரின் நிலை பரிதாபம்!

இலங்கையின் வடக்கே, வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையிலிருந்து அனுராதபுரம் மற்றும் அதன்பின்னர் மகர சிறைக்கு மாற்றப்பட்ட நிலையில் அரசியல் கைதி நிமலரூபன் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு தமிழ் அரசியல் தலைவர்களிடையே ஆத்திரத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியிருக்கிறது.

நிமலரூபன் சிறைச்சாலை மருத்துவமனையில் உயிரிழந்த பின்னரே அவரது உடல் றாகமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசியிடம் சுட்டிக்காட்டினார்.

வவுனியாவில் சிறைக்காவலர்கள் மூவரை பிடித்து வைத்து போராட்டம் நடத்தியதாகக் கூறப்படுகின்ற தமிழ் அரசியல் கைதிகளில் 22 பேரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றக் குழுவினர் மகர சிறைச்சாலையில் நேற்று புதன்கிழமை பார்வையிட்டனர்.

இவர்களில் ஆறுபேர் மகர சிறைச்சாலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களது நிலைமை மோசமானதாக இருப்பதாகவும் அவர்களைப் பார்வையிட்ட நாடாளுமன்றக் குழுவில் இடம்பெற்றிருந்த யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

மகர சிறைச்சாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மற்றுமொரு கைதியான வவுனியா நெளுக்குளத்தைச் சேர்ந்த கணேசன் நிமலரூபன் (28 வயது) நேற்று அதிகாலை அங்கு உயிரிழந்ததாகவும் அதன் பின்னர் அவரது உடல் றாகம அரச  மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

இதுதவிர, மேலும் நான்கு பேர் றாகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவர் கோமா நிலையில் இருக்கின்றார். ஏனைய மூவரில் ஒருவருக்கு இரண்டு கால்களும் அடித்து முறிக்கப்பட்டிருப்பதாகவும் மற்றொருவருக்கு ஒரு கால் அடித்து முறிக்கப்பட்டுள்ளதாகவும் ஒருவருடைய காலில் துப்பாக்கிச் சூட்டுக்காயம் காணப்பட்டதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.

அத்துடன் கண்டி போகம்பறை சிறைச்சாலையிலும் இருவர் இருப்பதாகவும், இவர்கள் அனைவருமே வவுனியா சிறைச்சாலையில் சிறைக்காவலர்கள் பணயம் வைக்கப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, கண்ணீர்ப்புகையால் மயக்கமடைந்ததன் பின்னர் கம்புகள், தடிகளினால் கடுமையாகத் தாக்கப்பட்டு, அனுராதபுரம் சிறைச்சாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள உயர் சிறையதிகாரியின் முன்னிலையில் மிக மோசமான முறையில் தாக்கப்பட்டதாகவும் தங்களைச் சந்தித்த கைதிகள் அனைவரும் தெரிவித்ததாக சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.

தமிழ் அரசியல் கைதிகள் இவ்வாறு மோசமான முறையில் தாக்கப்பட்டிருப்பது பாரதூரமான மனித உரிமை மீறல் என்று வர்ணித்துள்ள சுரேஷ் பிரேமச்சந்திரன், இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவரவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வதற்கென பல்வேறு அரசியல் கட்சிகளையும் உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ள விசேட குழுவொன்றின் ஊடாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

TAGS: