இலங்கை கடற்படையில் கமோடார் பதவி வகித்த தமிழர் ஒருவர் கனடாவில் தஞ்சம் கோரி சமர்ப்பித்த மனு ஒன்று கனடா நாட்டின் குடிவரவு மற்றும் அகதிகள் ஆணையத்தால் நிராகரிக்கபட்ட்தை எதிர்த்து அவர் செய்த மேல் முறையீட்டு மனுவை கனடாவின் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
இலங்கை கடற்படையில் உயர்பதவியில் நீண்ட காலம் பணி செய்ததன் மூலம் போரில் கடற்படை இழைத்த மனித உரிமை மீறல்களிலும் இவர் பங்குதாரியாகிறார் எனவே அவருக்கு புகலிடம் தர முடியாது என்று ஆணையம் அளித்த தீர்ப்பையும் அது உறுதிப்படுத்தியிருக்கிறது.
இலங்கைக் கடற்படையில் பணிபுரிந்த வெகுசில தமிழர்களில் ஒருவரான நடராஜா குருபரன், 1981-ஆம் ஆண்டு இலங்கை அரச கடற்படையில் சேர்ந்து படிப்படியாக பதவி உயர்வு பெற்று, கமோடார் பதவிக்கு உயர்ந்தார்.
ஆனாலும், தான் ஒரு தமிழர் என்ற காரணத்தாலேயே, தொடர்ந்து தனது பணிக்காலத்தில் இலங்கைக் கடற்படையின் உயர் அதிகாரிகளால் சந்தேகக் கண்களுடனே பார்க்கப்பட்டதாகவும், விடுதலைப் புலிகளுக்கும் இவருக்கும் தொடர்பு இருக்குமா என்று அடிக்கடி விசாரிக்கபட்டதாகவும் அவர் கூறினார்.
2001-ஆம் ஆண்டிலிருந்து 2009-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில், இவர் பல முறை கடற்படையிலிருந்து பணி துறப்பு செய்ய அனுமதிக்குமாறு கோரியும், கடற்படை அதை அனுமதிக்கவில்லை என்று தனது கோரிக்கை மனுவில் கூறியுள்ளார்.
2009-ல் போர் முடிந்த பிறகு, பதவியிலிருந்து ஓய்வு பெற்ற தனக்கு, இலங்கை அரசுடன் இணைந்து இயங்கும் ஆயுதக்குழுவொன்றிடமிருந்து அச்சுறுத்தல்கள் வந்ததாகவும், தனது மனைவி பணத்துக்காக கடத்தப்பட்டு மிரட்டப்பட்டதாகவும் கூறினார்.
இதனையடுத்து, பயன்படுத்தப்படாமல் இருந்த அமெரிக்க விசா ஒன்றைப் பயன்படுத்தி அவர் 2009-ம் ஆண்டு ஜூலை மாதவாக்கில் அமெரிக்கா வந்து அதனூடாக கனடா வந்து சேர்ந்து, கனடாவில் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் அரசியல் தஞ்சம் கோரி விண்ணப்பித்தார். இவரது மனுவை விசாரித்த கனடா நாட்டு குடியவரவு மற்றும் அகதிகள் ஆணையம், இவரது மனுவை நிராகரித்தது.
தீர்ப்பின் முக்கியப் பகுதி!
இந்தத் தீர்ப்பில் முக்கியமான விஷயம் என்னெவென்றால், கனடா நாட்டு அகதிகள் ஆணையம், இலங்கை கடற்படை, பாதுகாப்புப் படைகளின் ஒரு பகுதியாக இருந்து, போரின் போது, மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்தது என்று கூறியிருப்பதுதான்.
மறைமுகத் தொடர்பும் குற்றமே
கடற்படையில் தானாக சேர்ந்து நீண்ட காலம் பணி புரிந்து, பதவி உயர்வும் பெற்ற குருபரன், விடுதலைப்புலிகள், தமிழ் மக்கள் மற்றும் விடுதலைப்புலிகளுக்கு உதவியதாக சந்தேகிக்கப்பட்டோர் ஆகியோருக்கு கடற்படை செய்த துஷ்பிரயோகங்களுக்கு, கடற்படையில் நீண்டகாலம் பணி புரிந்ததன் மூலமே துணையாக இருந்திருக்கிறார் என்று ஆணையம் கூறியது. மேலும் கடற்படையிலிருந்து விலக சந்தர்ப்பங்கள் இருந்தபோதும் அவர் கடற்படையிலிருந்து விலகவில்லை என்றும் அது சுட்டிக்காட்டியிருக்கிறது.
இந்தத் தீர்ப்பை கனடிய உயர்நீதிமன்ற நீதிபதியும் ஏற்றுக்கொண்டு, நடராஜா குருபரனின் மேல் முறையீட்டை நிராகரித்திருக்கிறார்.
ஐ.நா மன்ற சட்டங்கள் மற்றும் ஜெனீவா உடன்பாடுகளின் பல்வேறு ஷரத்துக்களை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், குருபரன், நேரடியாக மானுட குலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்திருக்காவிட்டாலும், இத்தகைய குற்றங்களை இழைக்க திட்டங்கள் தீட்டப்படும்போது அதில் கலந்து கொள்வதுகூட, சட்டரீதியாக அவரை அந்த குற்றங்களுக்குப் பொறுப்பாளியாக்குகிறது என்று கூறியிருக்கிறது.