இலங்கையின் மகர சிறைச்சாலையில் தாக்குதலுக்கு உள்ளாகி, பலியான தமிழ்க் கைதி ஒருவரின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
இறந்தவரின் உடலை இறுதிக் கிரியைகளுக்காக வவுனியாவுக்கு எடுத்துச் சென்றால், சமூக அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்று காவல்துறையினர் தெரிவித்த கருத்துகள் ஒரு நீதிபதியால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
பலியான கணேசன் நிமலரூபன் உடலை ராகமப் பகுதியிலேயே அடக்கம் செய்யும்படி நீதிபதி தெரிவித்துள்ளதை பெற்றோர் ஏற்றுக் கொள்ளவில்லை என்று அவர்களின் வழக்கறிஞர்களில் ஒருவரான குகராஜன் தமிழோசையிடம் தெரிவித்தார்.
மகர சிறைச்சாலையில், நிமலரூபன் கடுமையான தாக்குதல்களுக்கு உள்ளான நிலையிலேயே மரணமடைந்தார் என்று பல்தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அவரது சடலத்தின் பிரேதப் பரிசோதனை முடிவடைந்தாலும் அந்த அறிக்கை குடும்பத்தாருக்கோ, வழக்கறிஞர்களுக்கோ இதுவரை வழங்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இறந்து போன ஒருவரின் உடலை, குடும்பத்தாரிடம் ஒப்படைத்து, அவர்கள் விருப்பப்படி இறுதிக் கிரியைகளை செய்ய அனுமதிக்காமல் இருப்பது கடுமையான மனித உரிமை மீறல் செயல்பாடாகும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுபோன்ற மனித உரிமை மீறல் சம்பவங்கள் குறித்தும் கொழும்பிலுள்ள பன்னாட்டு தூதரக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் பிபிசியிடம் கூறினார்.
காலமான நிமலரூபனின் பெற்றோர் கூட காவல்துறையின் பிடியிலேயே உள்ளனர் எனவும் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறுகிறார்.
நாடாளுமன்றத்திலும் இந்த விஷயம் எழுப்பப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.