இலங்கையில் இறுதிக் கட்டப் போரின்போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை பல தரப்பினரும் தமது நலன்கள் சார்ந்த உள்நோக்கத்தோடு மிகைப்படுத்திக் கூறிவருவதாக இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
ஐநா தலைமைச் செயலர் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் குழு அடங்கலாக அனைத்துலக சமூகத்தில் பல்வேறு தரப்பினரும் இறுதிக்கட்டப் போர்ச் சம்பவங்கள் குறித்துதான் கவனம் செலுத்திவருவதாகக் கோட்டாபய ராஜபக்ஷ கூறியிருக்கிறார்.
குறிப்பாக, கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்பில் அடிப்படை ஆதாரமற்ற தகவல்கள் முன்வைக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.
7 ஆயிரம் முதல் 40 ஆயிரம்பேர் வரையில் என அமைந்துள்ள இந்த எண்ணிக்கைகள் சுயாதீனமான ஆதாரங்களை கணக்கில் எடுக்காமல் கூறப்பட்டவை என்றும் கோட்டாபய கூறியிருக்கிறார்.
இறுதிக்கட்டப் போரின்போது, 8000-க்கும் குறைவானவர்கள்தான் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்றும் இவர்களில் விடுதலைப் புலிகளும், அவர்களால் கொல்லப்பட்ட பொதுமக்களும், மோதலின் இடைநடுவில் சிக்கிக் கொல்லப்பட்டவர்களும் அடக்கம் என்றும் கோட்டாபய கூறினார்.
இறுதிப்போரில் கொல்லப்பட்டதாகக்கூறப்படும் 7,896 பேரில் பெரும்பாலானவர்கள் புலிகள் தான் என்று வெளிநாட்டுத் தூதர்களின் பயிற்சி முகாமில் கோட்டாபய ராஜபக்ஷ கணக்குக் காட்டியிருக்கிறார்.
இதேவேளை, இலங்கைப் படையினரின் நடவடிக்கைகளால் கொல்லப்பட்டவர்கள் எத்தனைபேர், காணாமல்போனவர்கள் எத்தனைபேர் என்று எழுகின்ற குற்றச்சாட்டுக்கள் மற்றும் கேள்விகளுக்கான பதில்களைத் தரக்கூடிய புள்ளிவிபரங்களை கோட்டாபய ராஜபக்ஷ இங்கு தெளி்வாக முன்வைக்கவில்லை.
இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் இந்த தகவலை மனித உரிமை அமைப்புகளும் மனித உரிமை ஆர்வாளர்களும் கடுமையாக கண்டித்துள்ளனர்.
இலங்கை படையினரால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களையும் இனப்படுகொலை செயல்பாடுகளையும் மூடிமறைப்பதற்காகவே அவர் இவ்வாறான தகவல்களை வெளியிட்டுள்ளதாக மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டிள்ளன.