சிலாங்கூர் மாநிலத்தில் தண்ணீர் வளச் சலுகையைப் பெற்றுள்ள சபாஷ் நிறுவனம் தண்ணீர்க் கட்டணத்தை அதிகரிக்கும் முயற்சிகள் மக்களுக்குச் சுமையை ஏற்படுத்துமானால் அதனைத் தடுப்பதற்கு பக்காத்தான் வழி நடத்தும் மாநில அரசுடன் இணைந்து கொள்ள சிலாங்கூர் எதிர்த்தரப்பு முன் வந்துள்ளது.
“மக்களுக்குச் சுமையை ஏற்படுத்தும் வகையில் சபாஷ் நீர் கட்டணத்தை உயர்த்த முயற்சி செய்யுமானால் அதற்கு எதிராகப் போராடுவதற்கு இந்தத் தரப்பில் உள்ள நாங்கள் மாநில அரசாங்கத்துடன் கை கோர்த்துக் கொள்வோம்,” என எதிர்த்தரப்புத் தலைவரான முகமட் சாட்டிம் டிமான், சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றக் கூட்டத்தில் துணை வரவு செலவுத் திட்ட மசோதா மீது விவாதம் நிறைவு செய்யப்பட்ட போது கூறினார்.
சுகாதாரம், தோட்டத் தொழிலாளர்கள், வறுமை ஒழிப்பு, கருணை அரசாங்கம் ஆகியவற்றுக்கு பொறுப்பான ஆட்சி மன்ற உறுப்பினர் சேவியர் ஜெயகுமார், தமது துறைகள் தொடர்பான விவாதங்களை முடித்து வைத்த போது எழுப்பிய துணைக் கேள்வியில் முகமட் சாட்டிம் அதனைத் தெரிவித்தார்.
தற்போது சபாஷ் நிர்வாகத்தில் இருக்கும் லங்காட் 2 நீர் சுத்திகரிப்பு நிலையம், மாநில நீர் விநியோக முறை மீதான கேள்விகளுக்கு சேவியர் பதில் அளித்தார்.