லிபியாவில் அமைய உள்ள இடைக்கால அரசிற்கு இந்தியா ஆதரவு தர உள்ளது. இதற்காக ஐ.நா.வில் நடக்கவுள்ள பொதுச்சபைக்கூட்டத்தில் ஆதரவு தெரிவிக்கவுள்ளது.
ஐ.நா.வின் 66-வது பொதுச்சபைக் கூட்டம் செப்டம்பர் 20-ம் தேதி நியூயார்க் நகரில் நடக்கிறது. இதில் இந்தியா சார்பில் அந்நாட்டு தலைமையமைச்சர் மன்மோகன்சிங் கலந்து கொள்கிறார். கடந்த 1-ம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸ் நகரில் லிபியா விவகாரம் குறித்து 65 நாடுகள் பங்கேற்ற மாநாட்டின் போதே இந்தியா தனது ஆதரவினை தெரிவித்தது. இந்நிலையில் லிபியாவின் கடாபியின் ஆட்சி அகற்றப்பட்டுள்ளது. அங்கு முஸ்தாபா அப்துல் ஜலில் தலைமையில் இடைக்கால அரசு அமையவுள்ளது. ஜலில் தலைமையில் அமையவுள்ள லிபிய இடைக்கால அரசுக்கு இந்தியா தனது ஆதரவினை தெரிவித்து ஐ.நா. பொதுச்சபைக்கூட்டத்தில் வாக்களிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதே போன்று இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்னையில் பாலஸ்தீன தனிநாடு கோரிக்கை குறித்தும் ஐ.நா. பொதுச்சபையில் விவாதிக்கப்படவுள்ளது. பாலஸ்தீன தனிநாடு கோரிக்கைக்கும் இந்தியா ஆதரவு வழங்கலாம் என வெளியுறவு செயலர் ரஞ்சன்மாத்தாய் கூறினார்.