கடாபி ஆதரவாளர்கள் கடும் தாக்குதல்; எதிர்ப்பாளர்கள் பின்னடைவு

லிபியாவின் இரு நகரங்களில் கடாபி ஆதரவாளர்கள் கடும் எதிர்த்தாக்குதல் நடத்தி வருவதால் கடாபி எதிர்ப்பாளர்களின் தாக்குதல் பின்னடைந்துள்ளது. இந்நிலையில் புதிய அமைச்சரவை உருவாக்குவதில் லிபியாவின் இடைக்கால அரசு முனைந்துள்ளது.

லிபியாவின் பானி வாலித் மற்றும் சிர்ட் நகரங்களில் கடாபி ஆதரவாளர்கள் உள்ளனர். இந்நகரங்களை கைப்பற்ற கடாபி எதிர்ப்பாளர்கள் பேச்சுவார்த்தை மூலம் முயன்றனர். பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை அடுத்து இருதரப்புக்கும் இடையில் சண்டை மூண்டது.

பானி வாலித் நகரின் வடபகுதியில் எதிர்ப்பின்றி நுழைந்த எதிர்ப்பாளர்களை கடாபி ஆதரவாளர்கள் நேற்று மீண்டும் கடுமையாகத் தாக்கினர். அதேபோல் சிர்ட் நகரிலும் எதிர்ப்பாளர்களின் முன்னேற்றம் சிறிதளவே இருந்தது.

சிர்ட் நகரின் வானூர்தி நிலையத்தை எதிர்ப்பாளர்கள் கைப்பற்றிய போதும், அங்கும் தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது. இதற்கிடையில், பெங்காசியில் நேற்று கூடிய இடைக்கால மன்றம் புதிய அமைச்சரவை அமைப்பது குறித்து ஆலோசித்தது. நேற்றே அமைச்சரவை பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பதவிகள் ஒதுக்கீடு குறித்து ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீடிப்பதால் அறிவிப்பு வெளியாவதில் தாமதமாகலாம் எனத் தெரிகிறது.