லிம்:பெர்சேமீது எல்லாத் தாக்குதலையும் பிஎன் அரசு நிறுத்த வேண்டும்

செவ்வாய்க்கிழமை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை மதித்து பிஎன் அரசு துப்புரவான,நியாயமான தேர்தலுக்காக போராடும் கூட்டணி(பெர்சே)மீது எல்லாத் தாக்குதல்களையும் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று டிஏபி நாடாளுமன்றத் தலைவர் லிம் கிட் சியாங் வலியுறுத்தியுள்ளார்.

“(உள்துறை அமைச்சர்)ஹிஷாமுடின் உசேனுன் பிஎன் அரசும் விவேகமாகவும் நியாயமாகவும் ஜனநாயக முறைப்படியும் நடந்து கொள்ள வேண்டும்”, என்று லிம் நேற்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

 “அவர்கள் மலேசியா ஒழுங்கான, சுதந்திரமான, நியாயமான தேர்தல்முறையைப் பெற்றிருப்பதை உறுதிப்படுத்த பெர்சேயுடன் ஆக்கப்பூர்வமாக ஒத்துழைக்க வேண்டும்.

“ஹிஷாமுடினும் பிஎன்-னும் பெர்சேமீதான நியாயமற்ற தாக்குதல்களையும், மஞ்சள்நிறத்தைக் கண்டு அஞ்சுவதையும், பெர்சே டி-சட்டை என்றில்லாமல் மஞ்சள் டி-சட்டை அணிந்த எல்லாருமே தேசிய-எதிர்ப்பாளர்கள் என்பதால் கண்ட மாத்திரத்தில் அவர்களைக் கைது செய்யுமாறு ஒரு கட்டத்தில் போலீசுக்கு உத்தரவிட்டதைப்போல் அபத்தமான உத்தரவுகள் போடுவதையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்”, என்றாரவர்.

அஸ்ருலுக்கு இழப்பீடு வழங்குக

ஏப்ரல் 28 பெர்சே 3.0பேரணியில் கண்ணீர்புகைக் கலன் ஒன்று வலது கண்ணைத் தாக்கியதால் பார்வை இழந்த பெர்சே ஆதரவாளர் அஸ்ருல் வாடி அஹ்மட்டுக்கு இழப்பீடு வழங்குமாறு அரசுக்கு ஹிஷாமுடின்(வலம்) பரிந்துரைக்க வேண்டும் என்றும் லிம் கேட்டுக்கொண்டார்.

போலீஸின் முரட்டுத்தனத்தும் வன்முறைக்கும் பொறுப்பேற்று அரசு, வலதுகண் பார்வை இழந்த அஸ்ருக்கு காலம் பூராவும் இழப்பீடு வழங்க வேண்டும்.

நேற்று மனித உரிமை ஆணைய(சுஹாகாம்)த்தின் பொது விசாரணையில் கலந்துகொண்டு சாட்சியம் அளித்த இயந்திர பொறியியல் பட்டதாரியான அஸ்ருல்(இடம்), கண்ணீர்புகைக் கலன் கண்ணைத் தாக்கியதால் பட்ட வேதனையை உருக்கமாக எடுத்துரைத்தார்.பார்வை இழப்பினால் விரும்பிய துறையில் வேலை செய்ய முடியாமல் போய்விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.