ஒலிம்பிக் தொடக்க விழாவில் ராஜபக்சே! துரத்தியடிக்க தயராகும் லண்டன் தமிழர்கள்

லண்டனில் நாளை ஆரம்பமாகவுள்ள ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் போர்க்குற்றவாளியும் இலங்கை குடியரசுத் தலைவருமான மகிந்த ராஜபக்சே பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராஜபக்சே லண்டனுக்குள் நுழைந்தால் துரத்தியடிக்க தாமும் தயராக இருப்பதாக லண்டன் வாழ் அனைத்து தமிழர்களும் சூளுரைத்துள்ளனர்.

அத்துடன், மகிந்தவுக்கு எதிராக லண்டன் முழுவதும் மாபெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்த அங்குள்ள தமிழ் சமூகம் தயாராகி வருவதாக லண்டனில் இருந்து வெளியாகும் ‘த இன்டிபென்டன்ட்‘ நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜபக்ச விரைவில் லண்டன் பயணமாகவுள்ள தகவலை அவரது ஊடக பேச்சாளர் பந்துல ஜெயசேகர நேற்று உறுதிப்படுத்தியுள்ளார். அவர் நாளை வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெறவுள்ள ஒலிம்பிக் ஆரம்ப விழாவில் பங்கேற்கக் கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

அண்மையில் எலிசபெத் மகாராணியின் வைர விழாவில் பங்கேற்க லண்டன் வந்திருந்த மகிந்தவுக்கு எதிராக ஆயிரக்கணக்காக தமிழர்கள் தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு அவரை வெளியேற்றினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மகிந்த ராஜபக்சே மீண்டும் லண்டன் வந்தால் அவருக்கு எதிராக புதிய போராட்டங்கள் நடத்த உள்ளதாக தம்முடன் தொடர்பு கொண்ட தமிழ் செயற்பாட்டாளர்கள் தெரிவித்ததாக ‘த இன்டிபென்டன்ட்‘ நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, ராஜபக்ச ஒலிம்பிக் விழாவுக்கு அழைக்கப்பட்டது முற்றிலும் பொருத்தமற்றது என்று இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் அமைப்பின் ஜான் ஜனநாயகம் தெரிவித்துள்ளார்.

லண்டன் வரவுள்ள இலங்கைக் குழுவினருக்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளதாக உலகத் தமிழர் பேரவையின் பேச்சாளர் சுரேன் சுரேந்திரன் தெரிவித்துள்ளார்.

ஒரு நாட்டின் தலைவர் என்ற போர்வையிலிருந்தே அவர் போர்க்குற்றச் சாட்டுக்களிலிருந்து தப்பித்துக் கொள்வதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

TAGS: