தமிழீழம் என்ற இலக்கில் தொடர்ந்து பயணிக்க உலகத் தமிழ் அமைப்புகள் உறுதிமொழி

தமிழீழம் என்ற இலக்கை அடைவதற்கான போராட்டப் பயணத்தில் தொடர்ந்தும் உறுதியுடனும் அர்ப்பணிப்புடன் பயணிக்கவும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக செயற்பாடுகளில் ஒன்றிணைந்து செயற்படவும் உலகளாவிய தமிழ் அமைப்புகள் நோர்வே மாநாட்டில் உறுதிபூண்டுள்ளன.

நோர்வே தலைநகர் ஓஸ்லோவில் ஒன்று கூடிய பல்வேறு நாடுகளை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் அரசு சார்பற்ற அமைப்புக்களின் பிரநிதிதிகள் கடந்த வெள்ளிக்கிழமை( யூலை 27) தொடங்கி ஞாயிற்றுகிழமை (யூலை 29) வரை நடைபெற்ற மாநாட்டின் நிறைவின் போது இந்த முடிவை ஏகமானதாக மீள் வலியுறுத்தினர்.

ஆறு தசாப்தங்களுக்கு மேலாக சிறீ லங்கா அரசு தமிழ் மக்களை அழித்தும், அவர்களின் பூர்வீக நிலங்களை பறித்தும், அவர்களின் பண்பாடு மற்றும் பொருண்மிய வளங்களை சிதைத்தும் வருகின்ற செயற்பாடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், தமிழர்களின் அரசியல் அபிலாசையை அனைத்துலக சமூகத்திடமும், ஏனைய சக்திகளிடமும் அழுத்தி சொல்ல வேண்டிய முக்கிய தருமணமாக இது அமைகின்றது எனவும், தமிழர்களின் உரிமைகளை உலகிற்கு உணர்த்த தமிழீழத்திலும் அனைத்துலக ரீதியிலும் வலுப்படுத்த கூட்டாக செயல்படுவதோடு, வேகமெடுத்துள்ள சிங்கள அரசின் இன விரோத செயற்பாடுகளுக்கு கடிவாளம் போடவும், இறமையுள்ள தமிழீழத்தை அடைவதற்கான அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியது அவசியம் என்றும் அந்த மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது.

மேற்குறித்த செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வதற்காக, இந்த மாநாட்டில் கலந்து கொண்ட அமைப்புக்கள் அனைத்தும் புரிந்துணர்வுடன் ஒன்றுபட்டு செயற்படுவதற்கு உறுதிபூண்டுள்ளன.

இந்த மாநாட்டில், கனேடிய தமிழர் பேரவை, பிரித்தானிய தமிழர் பேரவை, நோர்வே தமிழர் பேரவை, ஜேர்மன் தமிழர் பேரவை, பிரான்சு தமிழர் பேரவை, டென்மார்க் தமிழர் பேரவை, நெதர்லாந்து தமிழர் பேரவை, இத்தாலி தமிழர் பேரவை, நியுசிலாந்து இளையோர் அமைப்பு, மலேசிய தமிழர் பேரவை, சுவிஸ்லாந்து தமிழர் பேரவை என பல தமிழர் அமைப்புகள் கலந்துகொண்டன என்பது குறிப்பிடத்தக்கது.

TAGS: