ஆழ்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தவர்கள் மீட்கப்பட்டனர்

இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியாவிற்கு சட்ட விரோத பயணம் மேற்கொண்டு ஆழ்கடலில் தத்தளித்த 28 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படைப் பேச்சாளரான கமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

தென் கிழக்குக் கடலுக்கு அப்பால் 300 கடல் மைல் தொலைவில் தத்தளித்துக் கொண்டிருந்தபோது, காப்பாற்றப்பட்ட இவர்கள் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை காலி மீன் பிடித் துறைமுகத்திற்கு கொண்டுவரப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

வடக்கு, கிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த இவர்களில் 4 பெண்களும் ஒரு சிறுவனும் அடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த மாதம் 13-ம் தேதி இலங்கையின் கிழக்கே வாழைச்சேனையிலிருந்து ஆழ்கடல் மீன் பிடிப் படகொன்றில் இவர்கள் புறப்பட்டுள்ளர்கள். ஒரு மாதத்தின் பின்பு அதாவது இம் மாதம் 15-ஆம் திகதி இவர்கள் பயணம் செய்த இயந்திரப் படகில் கோளாறு ஏற்பட்டுள்ளது.

11 நாட்களாக கடலில் தத்தளித்த இவர்கள் பற்றிய தகவலறிந்து பிரான்ஸ் நாட்டு வர்த்தக கப்பலொன்றின் உதவியை நாடியே இவர்களை மீட்க முடிந்ததாக இலங்கை கடற்படை கூறுகின்றது.

இதேவேளை சனிக்கிழமை ஆஸ்திரேலியாவிற்கான சட்ட விரோதப் பயணம் மேற்கொள்ள முயன்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இலங்கை கடற்படையினரால் நீர்கொழும்பு கடலிலும், கடலோரப் பிரதேசத்திலும் கைதான 51 பேரும் நீதிமன்ற உத்தரவின் பேரில் எதிர்வரும் 10-ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

TAGS: