உரிமைப் போராட்டத்திற்கான முன்னெடுப்புகள் தொடர்கிறதா?

பொது நலத்தின் அடிப்படை சுயநலன்தான் என்ற கருத்தில் நியாயம் இல்லாமல் இல்லை. அதற்காக பொதுநலன் என்பதில் இருக்கக் கூடிய பொதுமையான நன்மைகள் குறித்தும் நாம் உதாசீனம் செய்துவிடக்கூடாது.

பொது நலன் பற்றிய சிந்தனைகளே இந்த உலகை சமத்துவமான மனிதவாழ்வை ஏற்படுத்த உதவியது-உதவுகிறது. எனவே பொதுநலம் சுயநலத்தை அடிப்படையாகக் கொண்டதாயினும் அதன் வெளிப்பாடு, செயற்பாடு, நோக்கம், சிந்தனை என்பன பொதுமையாக இருப்பதை வரவேற்க வேண்டிய கட்டாய தேவையுண்டு என்பது ஏற்றுக் கொள்ளக்கூடியது.

அதேவேளை பொதுநலன் என்ற பதத்திற்குள் சுயநலன் மேலாடுமாக இருந்தால், அதனால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களும் அபத்தங்களும் ஏராளம். இத்தகைய ஆபத்துக்கள் அரசியலுக்குள்ளால் ஏற்படுமாக இருந்தால் ஏமாற்றங்கள் மனித இனத்தை கந்தறுத்துவிடும்.

ஈழத் தமிழ் இனத்தின் அரசியல் இருப்பு என்பது உரிமைக்கான சாத்வீகப் போராட்டங்களுடன் வலுவமைக்கப்பட்டது. உரிமையின் தேவைப்பாட்டை உணர்ந்த நிலையில் அகிம்சை வழியிலான உரிமைப் போராட்டங்கள் தேவைப்பட்டன. அத்தகைய போராட்டங்களை குறித்த அரசி யல் தரப்புகள் வலியுறுத்தியபோது, அதற்கான ஆதரவும் மக்கள் மத்தியில் தாராளமாகிக் கொண்டது.

இத்தகைய நியாயமான உருவேற்றங்களே ஆயுதப் போராட்டத்திற்கு வழி வகுத்தது. ஆயுதப் போராட்டத்திலும் தொடர்ச்சியான உருவேற்றங்கள் காணப்பட்டனவே தவிர ஆயுதப் போராட்டத்தின் உச்சமான வெற்றிப் புள்ளியில் இருந்துகொண்டு அதியுச்சமான உரிமைகளைப் பெறல் என்ற அரசியல் இராஜ தந்திர நகர்வை மேற்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது.

நிலைமை இப்போது மோசமாகி விட்டது. தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகளின் அடிப்படையில், அனைத்துலக சமூகமே இப்பிரச்னைக்கான தீர்வைப் பெற்றுத் தரவேண்டும் என்ற இறுதி நிலையில், உரிமைப் போராட்டம் ஓயாமல் தொடர்கின்றது என தமிழ் அரசியல் தரப்புகள் கூறுவதானது, தமிழ் இனத்தை மீண்டும் ஒருதடவை ஏமாற்றி தங்கள் சுயநல அரசியலை அரங்கேற் றும் முயற்சியாகும்.

எனவே இத்தகைய பொய்யுரைகளை விடுத்து உண்மை நிலைகளை தமிழ் மக்களுக்கு எடுத் துரைப்பதே தமிழ் அரசியல் தலைமைகள் தமிழ் இனத்திற்கு செய்யக்கூடிய அதியுச்சமான உதவியாகும்.

– வலம்புரி ஆசிரியர் தலையங்கம்

TAGS: