இலங்கையில் நடைபெற்று முடிந்த ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் இலங்கையில் இரண்டாம் இடத்தைப் (194 புள்ளி) பெற்ற தமிழ் மாணவன் ஒருவன் பரிசில் வாங்கும்போது அந்நாட்டு கல்வியமைச்சரின் காலில் விழுந்து வணங்குவதற்கு மறுப்பு தெரிவித்த சம்பவம் ஒன்று இன்று இடம்பெற்றுள்ளது.
புலமைப் பரிசில் பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற தமிழ் மாணவர்களை இன்று நடைபெற்ற மாநாடு ஒன்றில் கல்வி அமைச்சர் கௌரவித்து பரிசில்களை வழங்கினார்.
இதன்போது பரிசில்கள் வாங்கிய மாணவர்கள் கல்வி அமைச்சரின் காலில் விழுந்து வணங்கிய போதிலும் முல்லைத்தீவு, நெத்தலியாறு தமிழ் மகா வித்தியாலய மாணவன் பரமேஸ்வரன் சேதுராகவன் (வயது 10) மாத்திரம் அந்த சிங்கள அமைச்சரின் காலில் விழ மறுப்பு தெரிவித்து அவ்விடத்திலிருந்து அகன்றான்.
அமைச்சரின் காலில் விழுந்து வணங்குமாறு மாணவனின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் வற்புறுத்தியபோதிலும் அம்மாணவன் பிடிவாதமாக முடியாது எனக்கூறிவிட்டான். இதனால் அனைவருக்கும் முன் கல்வி அமைச்சர் சற்று சங்கடத்துக்கு உள்ளானார்.
இது குறித்து அம்மாணவனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, “நான் முல்லைத்தீவில் மிகவும் கஷ்ட சூழ்நிலையில் கல்வி கற்றேன். முகாம்களில் இருந்து படித்துள்ளேன். நான் எனது பெற்றோர், ஆசிரியரின் காலில் விழுவேனே தவிர ஏனையோரின் காலில் விழ மாட்டேன்” என கூறினான்.
இந்தநிகழ்வில் இலங்கை அமைச்சர்கள் உட்பட அரசாங்க அதிகாரிகள் பலர் கலந்துகொண்டர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

























