நடுக்கடலில் உயிரை பணயம் வைக்கும் ஈழத் தமிழர்கள்

ஆஸ்திரேலியாவுக்கு அகதிகளாக தஞ்சம் கோரி பயணிக்கும் ஈழத் தமிழர்களின் எண்ணிக்கை முன்னெப்போதையும்விட அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களில் மட்டும் ஆபத்தான படகுகள் மூலம் 138 ஈழத் தமிழர்கள் ஆஸ்திரேலியாவின் கிறிஸ்துமஸ் மற்றும் கொக்கோஸ் தீவுகளை சென்றடைந்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை காலை ஆஸ்திரேலிய நேரப்படி காலை 8 மணிக்கு 67 ஈழத் தமிழர்கள் இருந்த அகதிப் படகு கொக்கோஸ் தீவுகளுக்கு அருகே கடற்பரப்பில் நின்று கொண்டிருந்தது. அப்படகில் இருந்த 4 ஈழத் தமிழர்கள் கடலில் குதித்து நீந்தியே கொக்கோஸ் தீவுகளை சென்றடைந்தனர். அவர்களைப் பார்த்த கொக்கோஸ் தீவுவாசி ஒருவர் அவர்களுக்கு உணவு கொடுத்து விவரங்களைக் கேட்டறிந்திருக்கிறார்.

ஈழத் தமிழர்களுக்கு அடைக்கலம் கொடுத்த டொன்னெல் என்ற கொக்கோஸ்தீவுவாசி கூறுகையில், “நீந்தி கரை சேர்ந்த 4 பேரும் ஒன்றும் பயங்கரவாதிகள் அல்ல. அவர்கள் பசி மயக்கத்துடன் வந்திருந்த நல்ல தமிழர்களாக இருந்தனர். என்னுடைய மனைவிதான் அவர்களுக்கு குடிக்க நீரும் ஆப்பிளும் கொடுத்தார்” என்றார்.

பின்னர் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நீந்திச் சென்ற நால்வரில் ஒருவர் தமக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் ஆஸ்திரேலிய அதிகாரிகளிடம் கடலில் பசியுடன் தவிக்கும் ஈழத் தமிழர் பற்றி தகவல் தெரிவித்திருக்கின்றார். இதையடுத்து ஆஸ்திரேலிய கடற்படையினர் கடலில் தத்தளித்த 67 ஈழத் தமிழரையும் மீட்டு கரைக்குக் கொண்டு வந்தனர்.

முன்னதாக செவ்வாய்க்கிழமையன்று 28 ஈழத் தமிழர்கள் கிறிஸ்துமஸ் தீவை சென்றடைந்திருக்கின்றனர். மேலும் 43 ஈழத் தமிழர்கள் புகலிடம் கோரி வந்த படகு ஒன்றும் ஆஸ்திரேலிய கடற்படையால் மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

கடந்த 3 நாட்களில் மட்டும் மொத்தம் 138 ஈழத் தமிழர்கள் ஆஸ்திரேலியாவுக்கு ஆபத்தான படகு பயணம் மூலம் சென்றடைந்திருக்கின்றனர்.

TAGS: