இலங்கையில் கிழக்குக் கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 37 சீன நாட்டவர்கள் உட்பட 39 பேர் ஞாயிறு இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை அறிவித்துள்ளது.
கைது செய்யப்பட்ட ஏனைய இருவரும் இலங்கை பிரஜைகள் என்றும் கடற்படை தெரிவிக்கின்றது.
பொத்துவில் பிரதேசத்திலுள்ள அறுகம்பை கடல் பகுதியில் கரையிலிருந்து சுமார் 15 கடல் மைல் தொலைவில் இரண்டு ஆழ்கடல் மீன்பிடி வள்ளங்களுடன் மீன் பிடித்துக் கொண்டிருந்தவேளை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை ஊடகப் பேச்சாளர் கமாண்டர் கோசல வரணகுலசூரிய தெரிவித்தார்.
இலங்கை மீன் பிடி அமைச்சில் குறித்த இரண்டு வள்ளங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் இலங்கை கடற்பரப்பிலிருந்து 200 கடல் மைல்களுக்கு அப்பால் ஆழ்கடலில்தான் மீன் பிடிக்க மாத்திரமே இவர்களுக்கு அனுமதி உண்டு. ஆனால் அந்த அனுமதிக்கு முறணாக மீன் பிடித்தததன் காரணமாகவே இவர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் கூறுகின்றார்.
தற்போது திருகோணமலை கடற்படைத் தளத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ள இம் மீனவர்கள் ஆரம்ப விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுவருவதாகவும் அவர் கூறுகின்றார்.
இதற்கிடையே இந்த மீனவர்களில் இலங்கையைச் சேர்ந்த இரு முஸ்லிம்கள் மாத்திரம் கடற்படையினரால் காவல்துறையினரிடம் கையளிக்கப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
இந்த மீனவர்களின் விடுதலை குறித்து இலங்கையிலுள்ள சீன தூதராலயம் இலங்கை வெளிவிவகார அமைச்சுடன் தொடர்பு கொண்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இதேவேளை ஆஸ்திரேலியாவிற்கு சட்ட விரோதமாக செல்ல முயன்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் புத்தளம் மாவட்டம் வென்னப்புவ பிரதேசத்தில் 37 தமிழர்கள், 4 முஸ்லிம்கள் என 41 பேர் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவிக்கின்றார்.
மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திருகோணமலை, கிளிநொச்சி மற்றும் நீர்கொழும்பு ஆகிய இடங்களைச் சேர்ந்த இவர்கள் பயணத்துக்கு தயார் நிலையில் இருந்தபோதே கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.