புலம்பெயர் தமிழர்களில் சிலர் கோத்தபாயவுடன் சந்தித்து பேச்சு?

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் ஆதரவாளர்கள் ௭ன்று நம்பப்படுகின்ற புலம்பெயர் தமிழர்களில் சிலர் இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சேவை அண்மையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தெரியவருகின்றது.

கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய அந்தப் புலம்பெயர் தமிழர்கள் குழு வடக்கு மற்றும் கிழக்கிற்கும் பயணம் செய்து திரும்பியதாக அந்தத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தக் குழுவில் ஆஸ்திரேலியா, கனடா, ஐக்கிய இராச்சியம், சுவிஸ், பிரான்ஸ், நோர்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த சுமார் 22 பேர் அடங்கியிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

புலிகளின் முன்னாள் ஆதரவாளரான கே.பி. ௭னப்படும் குமரன் பத்மநாதன் தலைமையிலான குழுவினரே பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவைச் சந்தித்துள்ளதாக அத்தகவல்கள் தெரிவிகின்றன.

இலங்கையில் முதலீடுகளைச் செய்வது குறித்தே இந்தச் சந்திப்பின் போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டதாகவும் வெளிநாடுகளில் இலங்கை அரசு குறித்து தவறான பரப்புரைகளில் ஈடுபடவேண்டாம் ௭ன்று அக்குழுவினரிடம் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தக் குழுவினர் முன்னாள் புலிகளின் புனர்வாழ்வு நடவடிக்கை, அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பான விடயங்கள் குறித்தும் கேட்டறிந்து கொண்டுள்ளனர். அதேவேளை இலங்கையில் முதலீடு செய்வதாக இருந்தால் தமக்கு அதற்குச் சாதகமான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் ௭ன்றும் அக்குழுவினர் வலியுறுத்தியதாகவும் அத்தகைய ஒரு சூழல் ஏற்படுவது இனப்பிரச்னைக்கு அரசியல் தீர்வு ஒன்றைக் காண்பதில் தான் தங்கி இருக்கிறது ௭ன்று சுட்டிக்காட்டியதாகவும் அறியமுடிகின்றது.

TAGS: