மனிக்பாம் விரைவில் மூடப்படும்: இலங்கை அமைச்சர்

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்து மனிக்பாம் இடைத்தங்கல் முகாமில் தஞ்சமடைந்திருந்தவர்களில் தற்போது 800 குடும்பங்களளவிலேயே இன்னும் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்திருக்கின்றது.

மனிக்பாம் முகாமில் தற்போது 800 குடும்பங்களே இருக்கின்றன. இந்தக் குடும்பங்கள் விரைவில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுவிடுவார்கள். அவ்வாறு அவர்கள் மீள்குடியேற்றம் செய்யப்பட்டதும் மனிக்பாம் முகாம் வரும் டிசம்பர் 31 ஆம் திகதிக்கிடையில் மூடப்பட்டுவிடும் என்று இலங்கை மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன் கூறியுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் 342 குடும்பங்கள் மீள்குடியேற்றம் செய்யும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் குணரத்ன வீரக்கோன் மீள்குடியேற்றப்படும் குடும்பங்களுகுத் தமது அமைச்சின் மூலம் 4 ஆயிரம் இலங்கை ரூபா செலவில் தற்காலிக வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மீள்குடியேற்ற அமைச்சரை கைவேலி பாடசாலையில் நேரடியாகச் சந்தித்த முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாப்பிலவைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், தங்களைத் தமது சொந்தக் கிராமங்களில் மீள்குடியேற்றுவதற்கு உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருக்கின்றார்கள்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர் குணரத்ன வீரக்கோன் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள கேப்பாப்பிலவு பகுதியை இராணுவத்தினர் கையளித்ததும், அங்கு அந்தவூர் மக்களை சகல வசதிகளுடனும் மீள்குடியேற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதுவரையில் அந்த ஊர் மக்கள் வசதிகளுடன் தற்காலிகமாக ஓரிடத்தில் தங்க வைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

TAGS: