இலங்கையில் பல்கலைக் கழகங்கள் மூடல்

இலங்கையில் பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்கள் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டிருப்பதனால், மருத்துவ பீடங்கள் தவிர்ந்த ஏனைய பல்கலைக்கழகங்கள் அனைத்தும் மூடப்படுவதாக இலங்கை அரசாங்கம் அதிரடியாக செவ்வாயன்று அறிவித்திருக்கின்றது.

தமக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் எனக் கோரி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டிருக்கின்றார்கள். இதேகோரிக்கையை முன்வைத்து பல்கலைக்கழகங்களில் உள்ள கல்விசாராத ஊழியர்களும் பணிபுறக்கணிப்பில் ஈடுபட்டிருந்தார்கள். இதனால், கடந்த 3 மாதங்களாகப் பல்கலைக்கழகங்களில் கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

இது விடயத்தில் ஜனாதிபதி தலையிட்டு பிரச்னைக்குத் தீர்வு காண முன்வர வேண்டும் என்று யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்றில் நேற்று ஈடுபட்டிருந்தார்கள். இந்த நிலையிலேயே பல்கலைக்கழகங்கள் மூடப்படுவது பற்றிய அரசாங்கத்தின் அறிவிப்பு வெளியாகியிருக்கின்றது.

பிரச்னைகள் ஏற்படும்போது அவற்றிற்குத் தீர்வு காண வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். அதனைவிடுத்து பிரச்னையைப் பூதாகரமாக்கும் வகையில் அரசாங்கம் செயற்பட்டிருப்பது தமக்குக் கவலையளிப்பதாக அமைந்திருக்கின்றது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது தமது எதிர்காலக் கல்வி தொடர்பில் அச்ச உணர்வை ஏற்படுத்தியிருக்கின்றது என்று யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பரமலிங்கம் தர்ஷானந்த் தெரிவித்துள்ளார்.

-BBC

TAGS: