இலங்கையை குறி வைக்கும் இந்திய ஏவுகணைகள்?

டெல்லி: இலங்கை மீது தாக்குதல் நடத்த இந்திய ஏவுகணைகளை தயார் செய்து வைத்துள்ளதாக, இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு இந்திய பாதுகாப்பு அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

இலங்கை ராணுவத்தினருக்கு தமிழகத்தில் பயிற்சி அளிப்பதை நிறுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த நிலையில் இலங்கையின் மீது தாக்குதல் நடத்த இந்திய ராணுவம் முயன்று வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சிங்கள செய்தி ஊடகமான சின்ஹலா நியூஸ் ஏஜென்சி, கொழும்பு பேஜ் உள்ளிட்ட சில ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தி:

அக்னி ரகத்தைச் சேர்ந்த நீண்டதூர ஏவுகணைகளை இலங்கையின் முக்கிய பகுதிகளை குறி வைத்து இந்தியா நிறுத்தியுள்ளது. கொழும்பு மற்றும் ராணுவத் தலைமையகம், அம்பாந்தோட்டை துறைமுகங்கள், கட்டுநாயக்க, ரத்மலானை மற்றும் மத்தால விமான நிலையங்கள், புத்தளம் அனல் மின் நிலையம். கரவலப்பிட்டிய-களனிதிஸ்சா மின் நிலையங்கள் உள்ளிட்ட பல முக்கிய பகுதிகளை இலக்காக வைத்து இந்திய ஏவுகணைகள் நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஏவுகணைகள், ஒருங்கிணைந்த வழிகாட்டுதல் தொழில்நுட்ப ஏவுகணை திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளது. இவை ஆயிரம் முதல் 2 ஆயிரம் கிலோ எடை கொண்ட அணு ஆயுதங்களை சுமந்து கொண்டு செல்லும் ஆற்றல் பெற்றவை. மேலும் ஆயிரம் முதல் 8 ஆயிரம் கி.மீ. வரை சென்று துள்ளியமாக தாக்க கூடிய வகையில் அக்னி 5 ஏவுகணை வடிவமைக்கப்பட்டு உள்ளது.

அக்னி 5 ஏவுகணை மூலம் இலங்கை உள்ளிட்ட தெற்காசியாவில் உள்ள எந்தவொரு நாட்டில் உள்ள ஒரு இலக்கையும் தாக்க முடியும். குறிப்பாக ஈரான், பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், மியான்மார் வழியாக சீனாவின் விநியோக பாதையை தடுக்க, அமெரிக்காவும் இந்தியாவும் ரகசியமாக இணைந்து திட்டமிட்டுள்ளது.

பாகிஸ்தான் மற்றும் சீனாவிடம் இருந்து ஏவுகணைத் தாக்குதல் நடைபெற்றால் அதை தடுப்பதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை இந்தியா செய்து வருகிறது,” என்று அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதனை மறுத்துள்ள இந்திய பாதுகாப்பு அதிகாரிகள், இந்தியாவும், இலங்கையும் நட்பு நாடுகள். இரு நாடுகளுக்கும் இடையே சின்ன மன வருத்தம் கூட இல்லை. இனி வரவும் வாய்ப்பு இல்லை. இது போன்ற செய்திகள் யூகத்தின் அடிப்டையில் வெளியிடுவது தேவையில்லாத பதட்டத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளனர்.