மிரட்டல்கள் அதிகரிப்பதால் சிங்களவர்கள் தமிழகம் செல்ல வேண்டாம் : இலங்கை அரசு

கொழும்பு : இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு எதிரான போக்கை ராஜபக்சே தலைமையிலான சிங்கள அரசு தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது. தமிழர்கள் பகுதிகளில் சிங்களவர்களை குடியேற்றி வருகிறது.

உலக நாடுகளின் எதிர்ப்பை சிங்கள அரசு பொருட்படுத்தவில்லை. ஏராளமான தமிழர்கள் இன்னும் முள்வேலி முகாம்களுக்குள் சிறைப்பட்டுக் கிடக்கின்றனர். இலங்கை அரசின் தமிழர் விரோத போக்கு, தமிழகத்தில் அரசியல்வாதிகள், பொதுமக்கள் மத்தியில் கோபத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இலங்கை மக்கள் மறு அறிவித்தல் வரும்வரை தமிழகத்துக்கு செல்லவேண்டாம் என, அந்நாட்டு அரசாங்கம் அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

அண்மைக் காலங்களில் தமிழ்நாட்டுக்குச் சென்ற இலங்கை சுற்றுலாப் பயணிகள், யாத்ரிகர்கள், விளையாட்டு மற்றும் கலாச்சாரத் துறை தொடர்பானவர்கள், தொழில்முறை பயிற்சிக்காக செல்பவர்கள் என பலதரப்பட்டவர்கள் பாதுகாப்பு அச்சுறுத்தலுக்கு உள்ளானார்கள். அங்கு இலங்கை பிரஜைகளுக்கு எதிரான அச்சுறுத்தும் செயல்கள் அதிகரித்துள்ளதால், இலங்கை குடிமக்கள் மறு அறிவித்தல் வரும் வரை தமிழ்நாட்டுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

TAGS: