மகிந்தாவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல்

இலங்கை குடியரசுத் தலைவரும் போர்க்குற்றவாளியுமான மகிந்தா ராஜபக்சேவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திச் சேவைகள் தெரிவிக்கின்றன.

விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவராக இருந்த ரமேஷ் என்பவரின் மனைவி வத்சலாதேவியின் சார்பாக அவரது கணவன் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

11 சிஐவி 6634 என்ற இலக்கத்தை கொண்ட இந்த வழக்கில், சானல்4 காணொளியில் கர்ணல் ரமேஸ், இலங்கைப் படையினரால் அடையாளம் தெரியாத இடம் ஒன்றில் வைத்து விசாரணை செய்யப்படும் காட்சி, அவர் கொல்லப்பட்டதன் பின்னர் ஒரு தொலைக்காட்சியில் காட்டப்பட்ட அவரது உடலை மனைவி அடையாளம் காட்டியமை என்பன சாட்சியங்களாக தெரிவிக்கப்படடுள்ளன.

இலங்கையின் முப்படைகளுக்கும் தளபதி என்ற அடிப்படையில் மகிந்தா ராஜபக்சேவே, கர்ணல் ரமேஸின் கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவரே போர்க்குற்றத்துக்கு பொறுப்புக்கூற வேண்டும் என்றும் அம்மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு ஆதாரங்களாக, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனின் நிபுணர் குழு, இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெற்றதாக வெளியிட்ட அறிக்கை. அதில் 40 ஆயிரம் பொதுமக்கள் வரை கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ள தகவல், தாக்கப்பட்ட மற்றும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட கணக்கு காட்டப்பட்டாத இன்னும் 140 ஆயிரம் பொதுமக்களின் உயிரிழப்பு என்பன சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் சபையின் 66-வது கூட்டத்தொடர் தற்போது நடைபெற்றுக்கொண்டிருப்பதுடன் அங்கு மகிந்தா ராஜபக்சே உரை நிகழ்த்துகிறார்.

இந்நிலையில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை அவர்மீது போர்க்குற்றச் சாட்டுகள் வலுவடைவதற்கான சாத்தியங்கள் உள்ளதாக அனைத்துலக ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

TAGS: