ஆங் சான் சூச்சி அரசியல் சுற்றுப்பயணம்

மியான்மார் நாட்டின் ஜனநாயகத் தலைவர் ஆங் சான் சூச்சி, யாங்கூனுக்கு வெளியே முதன் முறையாக அரசியல் பயணம் மேற்கொண்டுள்ளார்.

மியன்மாரில் ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலில்  ஆங் சான் சூச்சி வெற்றி பெற்றார். எனினும், அவரை அரசாள விடாமல் இராணுவ அரசு பல ஆண்டுகள் வீட்டுக்காவலில் வைத்து சிறைப்படுத்தியது.

நோபல் பரிசு பெற்ற சூச்சி, சுமார் ஏழாண்டுகள் வீட்டுக் காவலில் இருந்து சில மாதங்களுக்கு முன்னர் விடுவிக்கப்பட்டார். அதன் பின்னர் யாங்கூன் நகரில் மட்டுமே சுற்றுப் பயணம் செய்து வந்த சூச்சி, முதன் முதலாக யாங்கூனுக்கு வெளியே அரசியல் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

யாங்கூனிலிருந்து, 80 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பாகோ பகுதியில், நேற்று அவர் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். இவரது பயணத்தால் கலவரம் ஏற்படும் அபாயம் உள்ளதாக மியன்மார் அரசு எச்சரிக்கை செய்தது.

இருப்பினும், பாகோ பகுதியில் பத்திரிகையாளர்கள், ஆதரவாளர்கள் புடை சூழ சென்ற ஆங் சான் சூச்சி, தனாட்பின் நகரில் நூலகத்தை திறந்து வைத்தார். பின்னர், புத்த மடாலயத்துக்குச் சென்று வழிபட்டார். இவரின் நடமாட்டத்தை அரசுப் பாதுகாவலர்கள் கண்காணித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.