இலங்கையின் கிழக்கு மாநிலத்தில் ஆட்சியமைப்பது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில் நேற்று முன்தினம் காலை திடீர் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
த.தே.கூட்டமைபு தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் தலைமை தாங்கிய இச் சந்திப்புக் கூட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுமந்திரன் ஆகியோரும் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான பசீர் சேகுதாவூத், செயலாளர் எம்.ரி.ஹசன் அலி, ஹரிஸ் மற்றும் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
இச்சந்திப்புக் கூட்டம்தொடர்பில் இரா.சம்பந்தன் தெரிவித்ததாவது;
“கிழக்கு மாநிலத்தில் ஆட்சி அமைக்க முடியாத நிலையில் இப்போது அனைத்துக் கட்சிகளும் உள்ளன. தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்தார்கள். முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக முஸ்லிம் காங்கிரஸை ஆதரித்தார்கள். எங்களுடைய தேர்தல் பிரசாரத்தின் அடிப்படையில் எங்களுடைய இரு கட்சிகளும் ஆளும் கட்சியினை எதிர்த்தன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் இணைந்து கிழக்கு மாநில ஆட்சியை பொறுப்பேற்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் தமது வாக்கினை மக்கள் வழங்கியிருக்கின்றார்கள். தேர்தல் முடிந்த பிறகு சிறந்த ஆட்சி இடம்பெறவேண்டும் என்று மக்கள் பகிரங்கமாகக் கூறிவருகிறார்கள். ஆனால், அரசாங்கம் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவுடன் கிழக்கில் ஆட்சி அமைக்க முயற்சி எடுத்து வருகிறது. எங்களுக்கும் முஸ்லிம் காங்கிரஸிற்கும் இடையில் பேச்சுவார்த்தை இடம்பெற்றது. தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஏனைய முஸ்லிம் தலைவர்களுடனும் பேசினோம். முழுமையாக நாங்கள் பேசினோம். மக்களுடைய நிலைமை பற்றியும் மக்களின் எதிர்பார்ப்பையும் தெளிவாக விளக்கினோம்.”
பேச்சு திருப்திகரமாக முடிந்தது. மக்கள் பொறுமையாக இருக்க வேண்டிய நேரம் இது. நாங்கள் தேர்தலின்போதும் சொன்னோம்; இப்போதும் சொல்கிறோம்; ஒரு முஸ்லிம் முதலமைச்சரை நாங்கள் ஏற்கத் தயார். முஸ்லிம் மக்கள் நாங்கள் இருவரும் கூட்டாட்சி ஏற்படுத்துவோம் என நம்பியே வாக்களித்துள்ளார்கள். எனவே அதனை நாம் காப்பாற்ற வேண்டும். தலைவர் ஹக்கீம் அவர்கள் எங்களுக்கு ஆதரவு தரமாட்டார் என்றோ, அரசுக்கு ஆதரவு கொடுப்பதாகவோ எதனையும் சொல்லவில்லை. இதுதொடர்பில் தமது கட்சி சந்தர்ப்பவாத அரசியல் எதுவும் செய்யாது என்றும் மக்களின் நலன்களை மனத்தில் வைத்தே எந்தவொரு முடிபையும் எடுக்கும் என ஹக்கீம் சொன் னார்” என சம்பந்தன் கூறியுள்ளார்.
இதேவேளை, தாங்களும் அரசுடன் பேசிய போதும் இன்னமும் ஒரு முடிவுக்கு வரவில்லை என ஹக்கீமும் கூறியதாக சம்பந்தன் மேலும் சொன்னார்.