கிழக்கு மாநிலத்தில் ராஜபக்சேவுடன் கூட்டு; துரோகம் இழைத்தது முஸ்லிம் காங்கிரஸ்!

இலங்கையில் அண்மையில் நடை பெற்று முடிந்த கிழக்கு மாநில சட்டமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை இல்லாத நிலையில் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் ஆதரவைப் பெற்று ராஜபக்சே தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி மீண்டும் கிழக்கு மாநிலத்தில் ஆட்சி அமைக்கின்றது.

சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரசிற்கும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனிக்குமிடையில் இடம் பெற்ற பேச்சுவார்ததையில் ஏற்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே ஆளும் கட்சியைச் சேர்ந்த நஜீப் ஏ மஜீத் முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று (18/09/2012) செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

மாநில சட்டமன்ற முறை இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட 25 ஆண்டு கால வரலாற்றில் முதலாவது முஸ்லிம் முதலமைச்சர் என்ற பெருமையை இவர் பெறுகின்றார். நடைபெற்று முடிந்த மாநில சட்டமன்ற தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னனி வேட்பாளர் பட்டியலில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தபட்ட இவர் 11,726 விருப்பு வாக்குககளைப் பெற்று மாநில சட்டமன்றத்திற்கு உறுப்பினராக தெரிவானார்.

 

தமிழ்-முஸ்லிம் மக்களின் உரிமைகளை சிங்கள பேரினவாதத்திடம் அடகு வைத்த முஸ்லீம் காங்கிரஸ்!

தேர்தல் பிரசாரத்தின்போது ராஜபக்சே தலைமையிலான அரசை கடுமையாக சாடி முஸ்லிம் மக்களிடம் வாக்கு சேகரித்த சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பணத்திக்காகவும் பதவிக்காகவும் தமிழ்-முஸ்லிம் மக்களின் உரிமைகளை சிங்கள பேரினவாதத்திடம் அடகு வைத்துவிட்டதாக கிழக்கு மக்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

மத்திய அரசுக்கு எதிர்ப்பை வெளிக்காட்டும் முகமாகவே கிழக்குத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு அங்கு வாழும் முஸ்லிம் மக்கள் ஆணையை வழங்கினர் என்பதுடன் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு கிடைக்கப்பெற்ற வாக்குகள் ராஜபக்சே தலைமையிலான ஆளும் அரசுக்கு எதிரான வாக்குகளாகும். எனவே, மக்கள் ஆணையைப் புறந்தள்ளிவிட்டு அக்கட்சி ராஜபக்சே அரசுடன் கூட்டு சேர்ந்து தமிழ் பேசும் மக்களைக் காட்டிக்கொடுத்துவிட்டது என்கின்றனர்  கிழக்கு மாநில மக்கள்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து சிறுபான்மை மக்களின் உரிமைக் குரலாக கிழக்கு மாநிலத்தில் ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்திருந்த இந்நிலையில் அதை உதறித் தள்ளிவிட்டு ராஜபக்சே அரசுடன் கூட்டுச் சேர்ந்து ஆட்சி அமைத்துள்ள முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் (படத்தில் வட்டமிடப்பட்டுள்ளவர்) தமிழ் பேசும் மக்களுக்கு துரோகம் இழைத்துவிட்டதாக கருதுகின்றனர் தமிழ் மக்கள்.

மாநில முதல்வர் பதவி உட்பட மாநில அமைச்சுகளை முஸ்லிம்களுக்கு வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருந்தவேளையில் சலுகைகளுக்காக அரசிடம் சோரம் போன முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக கிழக்கில் போராட்டம் வெடிக்கும் என்று அக்கட்சியின் சார்பில் கிழக்கு மாநில தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றவரும் அக்கட்சியின் உயர்நிலை தலைவருமான அஸாத் சாலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

TAGS: